Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கூட்டமைப்பின் கோரிக்கைக்காகவா ஆளுநரை நியமித்தீர்கள் - விக்னேஸ்வரன் பதிலடி

வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உத்தியோக பூர்வமாகக் கோரவில்லை என்று பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாகவா ஆளுநரை ஜனாதிபதி நியமித்தார்? என்று கேள்வியயழுப்பியுள்ளார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். நல்லூர் பிரதேச சபையில் நேற்று நடந்த வட மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது்,

'தீமையான ஒரு உடன்பாட்டை அல்லது சட்டத்தை நல்லவர்கள் சேர்ந்தால் அதை அவர்கள் வெற்றிகரமாக இயங்க வழி சமைப்பர். அதேபோன்று நல்லதொரு உடன்பாட்டை அல்லது சட்டத்தை தீயவர்கள் சேர்ந்தால் அதனைத் தோல்வியடையச் செய்து விடுவார்கள். எனவே எந்த ஒரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்தும் அலுவலர்கள் மனிதாபிமான சிந்தை கொண்டவர்களாக இருந்தாலேயே அந்தச் சட்டம் நன்மை பயக்கும். வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி இராணுவப் பின்னணியில் இருந்து வந்தவர்.
அவரால் பொதுமக்களின் பிரச்சினைகளை, எண்ணங்கள், சிந்தனைகளை சரியாகப் புரிந்து கொள்ள முடியாது. அதனால் தான் அவரை நீக்க வேண்டும் என்றும் இராணுவம் சாரா குடிமகன் ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக ஆணித்தரமாகக் கூறி வருகின்றேன். ஆனால் எனது இந்தக் கருத்துக்கு பாதுகாப்புச் செயலரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ "வடக்கு முதலமைச்சர் தான் ஆளுநரை நீக்குமாறு கூறுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவ்வாறு கோரவில்லை'' என்று ஊடகங்கள் மூலம் பதில் கூறியுள்ளார்.
அவ்வாறாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக் அமைவாக சந்திரசிறியை ஆளுநராக நியமித்தார்கள்? என நான் அவரைக் கேட்கிறேன். மக்களுடைய ஆணையைப் பெற்ற ஒருவரின் கோரிக்கைக்கு கோத்தபாயவின் பதில் இதுவாகவே உள்ளது. சட்டவாக்கங்களின் ஊடாக அதிகாரப் பகிர்வை உரியவாறு ஏற்படுத்தி விடமுடியாது. தேவையான பொருளுதவியை வழங்குதல் சட்டப்படி விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் மற்றும் உரிய நிர்வாக அலகுகளை உண்டாக்குதல் மூலமாகவே அதிகாரப் பகிர்வை நடைமுறையில் வெற்றி கொள்ள முடியும்.
பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில விடயங்கள் சம்பந்தமாக எமக்கு சகல உரிமைகளும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஆளுநருக்கு அளித்திருக்கும் பல சலுகைகள் எமது மாகாண சபைகளைத் திறமையாக வழி நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளன. ஜனாதிபதியின் தற் துணிவின் பேரில் ஆளுநர் நியமிக்கபடுவதால் ஆளுநரின் தீர்மானங்கள் அரசியல் சார்பானதாக அமைகின்றன. எனவே மாகாண சபையின் நிர்வாகத்தை ஆளுநரின் தற்துணிவு அதிகாரம் முடங்கச் செய்துவிடக் கூடும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் தீர்மானங்களை ஆளுநர் உதாசீனம் செய்யக் கூடியதாக நடைமுறை அமைந்துள்ளன. மாகாண சபைகள் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியே பிரதான செயலாளரை ஜனாதிபதியை விமர்சிக்க அல்லது அவரின் விருப்பத்தை உதாசீனம் செய்ய எந்தப் பிரதம செயலாளருக்கும் மனம் வராது. அதனால் ஜனாதிபதியின் அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு எந்தத் தருணத்திலும் மறுப்புக்குட்படாத நிலையே தொடர்கிறது. ஆளுநருக்கு மாகாண பகிரங்க சேவை அலுவலர்கள் சம்பந்தமாக அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மாகாண சபையின் அதிகாரங்களை வெகுவாகக் குறைக்கின்றன.
ஒவ்வொரு மாகாணத்தினதும் மாகாண பகிரங்க சேவையின் அலுவர்களின் நியமனம்,இடமாற்றம், பதவி நீக்கம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு என்பன மாகாண ஆளுநருக்கு உரித்தாக்கப்படுவதாக அது கூறுகிறது. மாகாண ஆளுநருக்கு ஏதேனும் நியமனத்தை இடமாற்றக் கட்டளையை அல்லது பதவி நீக்கத்தை அல்லது அந்த மாகாணத்தின் பகிரங்க சேவை ஆணைக் குழுவினால் ஆக்கப்பட்ட ஒர் ஒழுக்காற்றுக் கருமம் தொடர்பான ஏதேனும் கட்டளையை மாற்றுவதற்கு வேறுபடுத்துவதற்கு, நீக்குவதற்கு தத்துவம் இருத்தல் வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தம் கூறுகிறது. இதிலிருந்து திருத்தம் ஆளுநருக்கு கூடிய சலுகைகளையும் பொது மக்களுக்கு குறைந்த உரிமைகளையும் வழங்கியிருக்கின்றது என்பதனை உணர முடியும். ஆளுநர் ஒரு கையால் கொடுத்து மறு கையால் திரும்பப் பெறக்கூடும் என்று நடைமுறைச் சாத்தியமாகவே இருக்கிறது.
தவிர ஆளுநரால் விடுக்கப்படும் பறைசாற்றல்களை எந்த நீதிமன்றத்தாலும் கேள்விக்கிடமாக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. மாகாண சபைகள் தமக்கே சகல உரித்தும் உடையன என்று எந்த விடயம் சம்பந்தமாகவும் உறுதியாகக் கூறமுடியாத நிலையே காணப்படுகிறது. 13 ஆவது திருத்தச் சட்டம் உண்மையிலேயே மாகாண நிர்வாகத்தை நடத்துவதாக இருந்தால் பலவித திருத்தங்களைத் தன்னுள் அடக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அதற்கு உதவ ஒருபோதும் முன்வராது. எமக்கு வெளிநாட்டு உதவிகள் வரும் போது நன்கொடையாளர்களுடன் எம்மைப் பேசவிடாது திறைசேரி அலுவலர்கள் தாமே முன்நின்று பேச்சு நடத்துவர். மாகாண சபைக்கு பணம் வந்தாலும் இதே நிலையே ஏற்படும்' என்றார்.

Post a Comment

0 Comments