மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மேய்ச்சல்தரைப்பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடத்தப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல்தரைக்கென ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி விவசாயத்தில் ஈடுபடுவதனைத் தடுத்து இம் மாவட்டத்தின் விவசாயப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படுவதனை நிறுத்தவேண்டும் என்ற மாகாண சபை உறுப்பினர் இராதுரைரெட்ணத்தின் பிரேரணை விவாதத்தின் போதே இந்த முடிவை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் மிகப்பெரிய பிரச்சினையாக இவ் மேய்ச்சல்தரை விவகாரம் சூடுபிடித்திருந்தது. குறித்த பிரேரணை கடந்த அமர்வின் போது முன்வைக்கப்பட்டிருந்தபோதும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.
வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செலயகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர், காணி அமைச்சர்எஸ்.திசாநாயக்க, விவசாய அமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், வன இலாகா பணிப்பாளர், வன விலங்குகள் ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோருடன் சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளும் கலந்து கெர்ளவுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மேய்ச்ச் தரை விவகாரம் தொடர்பில் தீர்வுகாணும் வகையில் வர்த்தமானிப்பிரகடனத்துக்கென தீர்மானிக்கப்பட்ட 27500 ஹெக்ரயர் வரையான நிலப்பரப்பில், பெரும்பகுதி கவனத்தில் எடுக்கப்படாது குறைந்தளவான நிலப்பரப்பே மேய்ச்சல் தரைக்குஎன ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், அம்மடக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று வடக்கு (வாகரை), கோரளைப்பற்று தெற்கு (கிரான்), ஏறாவூர் பற்று(செங்கலடி), மண்முனை மேற்கு( வவுணதீவு), மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) போரதீவுபற்று(வெல்லாவெளி) உள்ளிட்ட பிரNதுச செயலாளர் பிரிவுகளே உள்ளடங்குகின்றன.
ஏற்கனவே கோரப்பட்ட நிலப்பரப்பில், கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலை கிராமசேவையாளர் பிரிவிலுள்ள மயிலத்தமடு, மாதவணை, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் வரும் கச்சைக்கொடி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மணலேத்தம் ஆகிய பிரதேசங்கள் சேர்க்கப்படாதுள்ளது. இது குறித்து ஆராய்ந்தபோது மாகாண சபை அதிகாரிகள் சிலர் தவறுதலாக விடப்பட்டதாக கூறுகின்றனர்.
இப்பிரதேசங்கள் சேர்க்கப்படாமையானது மேய்ச்சல் தரை விவகாரத்தில் பெரும் பிரச்சினைகளை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சினைகளுக்கு முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்தார்.
0 Comments