வன்முறை பயன்படுத்தப்பட்டால் தீக்குளிப்போம்! வடமராச்சி கிழக்கு மக்கள் உண்ணாப் போராட்டம்!
வடமராச்சி கிழக்குப் பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் உண்ணாநிலைப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

தமக்கான அடிப்படை வசதிகளை செய்துதருமாறு கோரியே இவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வடமராச்சி கிழக்கு மருந்தங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்களே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தங்களின் இந்தப் போராட்டத்தை வன்முறை மூலம் அகற்ற முயற்சித்தால் தீக்குளித்து உயிரிழக்கத் தயாராக இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் தெரிவித்துள்ளனர்.
மருந்தங்கேணி பிரதேச செயலாளர் அலுவலகத்தின் முன்னால் இன்று காலை ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டத்தை முன்னடுத்து வருகின்றனர்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த இந்த மக்கள் 2010ஆம் ஆண்டு இந்தப் பிரதேசத்தில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், தமக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், தமக்கு வழங்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்கள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை எனவும், தாங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாகவும் கூறியே ஒருபகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments