தலவாக்கலையில் பாரிய தீ விபத்து : 4 கடைகள் முற்றாகச் சேதம்
அட்டன் - நுவரெலியா பிரதான பாதையில் தலவாக்கலை நகரின் பிரதான வீதியில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினால் நான்கு வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.
இன்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் நகையகம், பாதணிகள், மரக்கறி, மற்றும் புத்தக விற்பனை நிலையங்கள் ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.
தீயை அணைப்பதற்கு தலவாக்கலை மற்றும் லிந்துலை பொலிஸாருடன் இணைந்து பிரதேசவாசிகள் முயற்சிகளை மேற்கொண்டதுடன் தலவாக்கலை - லிந்துலை நகரசபை, அட்டன் - டிக்கோயா நகர சபை மற்றும் நுவரெலியா மாநகர சபையின் தீயனைப்பு பிரிவினரின் உதவியுடன் பாதுகாப்பு படையினரின் உதவியும் பெறப்பட்டு பலத்த பிரயத்தின் பின்னர் இன்று அதிகாலை 6 மணியளவில் தீ ஏனைய கட்டடங்களுக்கும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்பு இதுவரை மதிப்பிடப்படவில்லை. இந்த தீ விபத்திற்கு மின்சார ஒழுக்கே காரணம் என கடை உரிமையாளர்கள் தெரிவிக்கும் நிலையில் தலவாக்கலை பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments