04-03-2024
எதிர்காலத்தில் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களது திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அவர்களின் எதிர்கால இலக்குகளை அடைவதற்குத் தேவையான பின்னணி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தரம் எட்டு மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களில் உள்ள மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவு பாடத்தையும் கற்பதற்கு வாய்ப்பு கிடைக்கபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
அதற்கமைய, முன்னோடி திட்டமாக 20 பாடசாலைகளில் இந்த திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்காக தயாராகும் பிள்ளைகளுக்கு பெற்றோர் கொடுக்கும் அழுத்தம் நிறுத்தப்பட வேண்டும்.
புலமைப்பரிசில் பரீட்சை எதிர்காலத்தில் நடத்தப்படும் ஆனால் போட்டியைக் குறைக்க தேவையான சூழல் தயார் செய்யப்படும்.
வகுப்பறைக்கு வெளியில் உள்ள செயல்பாடுகளுக்கு மாணவர்கள் காட்டும் திறமைகளை அங்கீகரித்து அந்த திறன்களுக்கான மதிப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான தற்போதைய பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் எனவும், எஞ்சிய மூன்று பாடங்களை தொழில் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விடயங்களை கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
0 comments: