இலங்கை மின்சார சபையின் சுமார் 5,000 பேர் கொண்ட குழுவொன்று ஒரே நேரத்தில் இராஜினாமா செய்ய இணங்கியுள்ளதாக மின்சார ஊழியர் சங்கங்கள் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் எரிசக்தி அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவொன்றினை இட்டிருந்தார்.
அதாவதும், எந்தவொரு தனிநபரின் இராஜினாமாவையும் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுமாறும், இலங்கை மின்சார சபைக்கான அனைத்து நிலுவைத் தொகைகளையும் வசூலிக்குமாறும் இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு தான் அறிவுறுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் சீர்திருத்தங்கள், செலவுக் குறைப்பு பொறிமுறைகள், உற்பத்தித் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மின் திட்டங்களை செயல்படுத்துதல், டிஜிட்டல் கட்டண தளம் மற்றும் அவுட்சோர்சிங் கட்டண வசூல் மற்றும் இலங்கை மின்சார சபையின் சேவைகளுக்கு இடையூறு விளைவித்த தனிநபர்களுக்கு எதிராக ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பான பணிகளை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிராக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த 66 ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, பல மின் ஊழியர் சங்கங்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றன.
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் தொடர்பில் முதலில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments: