ஆசிரியை ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றதாக கூறப்படும் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஹொரண பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராவார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நபர் பயணித்த சிறிய லொறியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மொரகஹஹேன, மில்லவ பகுதியில் குறித்த ஆசிரியர் வீதியில் சென்றுகொண்டிருந்த போது லொறியில் பயணித்த சந்தேகநபரான முன்னாள் உறுப்பினர் ஆசிரியையை வீதிக்கு குறுக்கே சென்று மறித்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஆசிரியை 119 அவசர அழைப்பு பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், மொரகஹஹேன பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் துசித விக்ரமரத்ன தலைமையிலான குழுவினர் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கும் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினருக்கும் இடையே பண கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் முரண்பாடு நிலவியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 39 வயதுடைய ஆசிரியை ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments: