Home » » ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

 


12-01-2023


ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பை அரசாங்கம் கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

“புதியதோர் கிராமம், புதியதோர் நாடு“ தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் நேற்று முன்தினம் (10) உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இதனை வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

முடங்கியிருந்த பொருளாதாரம் இப்போது செயற்படுகிறது. முன்னெப்போதையும் விட, பொருளாதார இயந்திரம் மற்றும் சேவை இயந்திரம் செயற்படும் போது, உங்கள் மீதுள்ள பொறுப்பு மற்றும் உங்களுக்கு வழங்கப்படும் புதிய சவால்களை வெற்றிகொள்வதற்கான தேவை அதிகமாக உள்ளது.

இலங்கையில் பத்தாயிரத்து நூறு பாடசாலைகள் உள்ளன. அவற்றில் அரைவாசிக்கும் மேற்பட்ட பாடசாலைகள் 1 ஏக்கர் முதல் 12 ஏக்கர் வரையான காணிகளை கொண்டுள்ளன. அவை குறுகிய கால பயிர்ச்செய்கையில் முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது அறிக்கைகளில் எங்கும் குறிப்பிடப்படுவதில்லை.

ஒவ்வொரு அங்குல நிலத்தையும் உற்பத்தித் திறனுக்கு மாற்றுவதில் என்ன குறை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து ஆலோசனை வழங்குவதும் வழிகாட்டுவதும் எமது பொறுப்பு. நாங்கள் புள்ளிவிவரங்களுடன் மட்டும் மட்டுப்பட்டிருக்க முடியாது. உயர்தரப் பரீட்சை விரைவில் நடக்கவிருக்கிறது. பிரதேச ரீதியாக எந்தவொரு பரீட்சையும் தடைபடாமல் இருக்க மாவட்ட செயலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அது எங்களுக்குரியதல்ல, பரீட்சை ஆணையாளருக்கு உரியது என்று கூறிக்கொண்டிருக்க முடியாது. பரீட்சை ஆணையாளருடன் தொலைபேசியில் பேசி கலந்துரையாடியாவது அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பரீட்சையை குழப்புவதற்கு எவருக்கும் இடமளிக்க வேண்டாம்.

ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அந்த சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மாதம் முதல் அடுத்த மாதம் மூன்றாவது வாரம் வரை பரீட்சைகள் நடக்கின்றன. உங்கள் பிள்ளைகளும் இதில் இருக்கலாம். இந்த பரிட்சையில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் தோற்றுகின்றனர். இதில் ஏதும் தடை ஏற்பட்டால், இன்னும் ஒரு வருடம் பல்கலைக்கழகம் செல்ல முடியாது. அந்தக் குற்றத்தில் நீங்களும் பங்காளியாகாதீர்கள். பிரச்சினை இருந்தால் எங்களிடம் தெரிவியுங்கள். இந்தப் பரீட்சை எங்கள் பிள்ளைகளுக்கு ஏற்கனவே தாமதமாகியே நடக்கிறது. அவர்களின் கோரிக்கைக்கு அமையவே தாமதமானது.

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பை எமது அரசாங்கம் கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளது. சுமக்க முடியாத சுமையாக இருந்தாலும் பல வருடங்களுக்குப் பின்னர் நாம் அதைக் கொடுத்தோம். கல்விச் சேவையின் அடிப்படைக் கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றவில்லை என்று எவராலும் கூற முடியாது. மேலும், அரச பணியில் ஓய்வு பெறுவதால் வெற்றிடமாகும் பணியிடங்களை நிரப்பி, தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஊழியர்கள் உள்ளனர். கடந்த காலங்களில் 56000 பேரை அரச சேவைக்கு சேர்த்துள்ளோம். அப்போது நான் பொது நிர்வாக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்தேன்.

இருபத்து நான்காயிரம் பேர் ஆசிரியர் சேவைக்கும், அபிவிருத்திப் பணிகள் மற்றும் ஏனைய அரச பணிகளுக்காக ஏனையவர்களும் இணைப்புச்செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் இன்னும் உபரியாக உள்ளனர். அவர்களையும் உற்பத்தித்திறன் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும்.


" பெரிய தனியார் தொழிற்சாலைகள் மற்றும் சிறு தொழில்களில் ஆட்கள் உள்ளனர். இவர்களை மாவட்ட அலுவலகங்களுக்கு அழைத்து வந்து இந்த மாபெரும் பணிக்கு உதவுமாறு கூறுங்கள். எங்களின் பல்வேறு துறைகளுக்கும் நலன்பேணல் திட்டங்களிலும் அவர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். மாறிவரும் இந்த காலகட்டத்தில் உங்கள் அறிக்கைகளில் எந்த இடைவெளியும் இருக்க முடியாது என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறேன். " என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |