இன்று காலை 05.30 மணிக்கு செய்யப்பட்ட பகுப்பாய்வுகளின்படி தாழமுகம் தொடர்பான தகவல்கள்:
நேற்றைய (24.12.2022) தினம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தாழமுக்கமானது கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 08km/h வேகத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து வந்து இன்று காலை 05.30 மணிக்கு தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.
இது தற்போது திருகோணமலையிலிருந்து கிழக்கு-வட கிழக்காக 110km தூரத்திலும்
யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 150km தூரத்திலும்
நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்காக 330km தூரத்திலும்
சென்னையில் இருந்து தெற்கு-தென்கிழக்காக 500km தூரத்திலும் காணப்படுகின்றது.
இது இன்று மதியம் தென்மேற்கு திசையில் மேலும் நகர்ந்து திருகோணமலை பிரதேசத்தின் ஊடாக இலங்கையை ஊடறுத்து சென்று நாளை காலை கன்னியாகுமரியின் Comorin பிரதேசத்துக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் காற்றின் வேகமானது 45km/h-55km/h வரை காணப்படுவதுடன் (காற்றின் வேகமானது 65km/h வரை அதிகரிக்க கூடும்) கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் நாளை மறுதினம் முதல் கடலின் கொந்தளிப்பு படிப்படியாக குறைவடையும்.
இதேவேளை இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் இன்ற காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் கிழக்கு, ஊவா, மத்திய, சப்ரகமுவ, மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் கனத்த மழை பெய்யும் எனவும்
சில பிரதேசங்களில் 150mm மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மீனவர் சமூகம் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் காலி முதல் கொழும்பு, புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களிலும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியங்களிலும் மறு அறிவித்தல் வரும் வரை துணிகர செயல் எதிலும் ஈடுபட வேண்டாம் எனவும்,
இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை எதிர்வு கூறலை அவதானமாக செவிமடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.சூரிய குமாரன்,
முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி.
0 Comments