Home » » உயர்தர பரீட்சைக்கு தோற்ற 80 சதவீத வருகை பதிவு அவசியம் என்ற தீர்மானம் தொடர்பில் மறுபரிசீலனை !

உயர்தர பரீட்சைக்கு தோற்ற 80 சதவீத வருகை பதிவு அவசியம் என்ற தீர்மானம் தொடர்பில் மறுபரிசீலனை !

 


கொவிட் தொற்று மற்றும் எரிபொருள் நெருக்கடிகளால் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாமல் நெருக்கடிகளை எதிர்கொண்ட மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு , 2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு 80 சதவீத பாடசாலை வருகை பதிவு அவசியம் என்று விடுக்கப்பட்ட அறிவிப்பு தொடர்பில் மறுபரிசீலனை செய்வதற்கு கல்வி அமைச்சிடம் பரிந்துரைக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


அடுத்த ஆண்டு முதல் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பாடசாலை வருகை 80 சதவீதமாகக் காணப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இந்த கல்வியாண்டுக்குரிய மாணவர்களே அடுத்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய நெருக்கடிகளின் அடிப்படையில் 80 சதவீத வருகை பதிவில் சிக்கல்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே இது தொடர்பில் செவ்வாய்கிழமை (28) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் , 2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80 சதவீதம் பாடசாலை வரவு அவசியமாகும் என்று வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம் தொடர்பில் அவதானம் செலுத்தி உரிய தீர்மானத்தை எடுக்குமாறு கல்வி அமைச்சருக்கு அறிவிக்கின்றேன்.

பாடப்பரப்புக்களை பரீட்சைக்கு முன்னர் நிறைவு செய்வதை இலக்காகக் கொண்டு , மாணவர்கள் இதில் முழுமையாக உள்வாங்கப்பட வேண்டும் என்பதற்காகவே 80 சதவீத பாடசாலை வரவு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் கடந்த காலங்களில் கொரோனா தொற்று மற்றும் எரிபொருள் நெருக்கடிகளால் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாமல் நெருக்கடிகளை எதிர்கொண்ட மாணவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

எனவே இவ்வாறான மாணவர்களுக்கு நியாயமான சலுகை வேலைத்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதால் , அது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கல்வி அமைச்சருக்கு பரிந்துரைக்கப்படும்.

செஸ் வரி தொடர்பில் இவ்வாரம் எந்தவொரு அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. தேசிய உற்பத்திகளைப் பாதுகாப்பதற்காகவே இறக்குமதி பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்படுகின்றன.

எவ்வாறிருப்பினும் பாடசாலை உபகரணங்களுக்கான செஸ் வரி அதிகரிக்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் என்றால் , இவ்விடயம் தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என தெரிவித்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |