Home » » சம்பளம் 1 இலட்சமாயின் 6% வரி அறவிடப்படும் !

சம்பளம் 1 இலட்சமாயின் 6% வரி அறவிடப்படும் !

 


வருமான வரி செலுத்துவதற்கான வருடாந்த எல்லைப் பெறுமதியை 1.2 மில்லியனாக குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதன் பிரகாரம், மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகையை வருமானம் பெறுவோரிடமிருந்து ஆகக்குறைந்தது 6 சதவீதத்தை வருமான வரியாக அறவிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிந்து கொள்ள முடிகின்றது.


இது தொடர்பான அமைச்சரவை அனுமதிப் பத்திரம் எதிர்வரும் நாட்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமைச்சரவை அனுமதியைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அரசாங்க உள்ளக மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வரி அறவீட்டு முறை முன்னைய அரசாங்கத்தில் காணப்பட்டதுடன், கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வரித் திருத்தத்தினூடாக, வருமான வரி அடங்கலாக பல்வேறு வரிகள் நீக்கப்பட்டிருந்தன. 

அதன் பிரகாரம் வருடாந்த வருமான வரி அறவிடும் எல்லைப் பெறுமதி 3 மில்லியன் வரை அதிகரிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த வரி அதிகரிப்பு தொடர்பில் 2022 மே மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டு, இந்த எல்லைப் பெறுமதி ரூ 1.8 மில்லியன் வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ள அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம் முதல் 1.2 மில்லியன் ரூபாய்க்கு அப்பால் உழைக்கும் ஒவ்வொரு மேலதிக 5 மில்லியன் ரூபாய்க்கும் தலா 12, 18, 24, 30 மற்றும் 36 என வரி அறவிடப்படும்.

கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்துக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்குமிடையே இடம்பெற்ற ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகளின் போது, இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்ததுடன், எதிர்வரும் 48 மாத காலப்பகுதிக்காக அந்நிதியத்தினால் வழங்கப்படும் 2.9 பில்லியன் டொலர் நிதி வசதியைப் பெற்றுக் கொள்வதில் பின்பற்ற வேண்டிய அடிப்படை அம்சங்களில் இந்த வரித் திருத்தமும் அடங்கியுள்ளது.

இதற்கு மேலதிகமாக பிடித்து வைத்திருக்கும் வரி அறவீட்டிலும் திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவித்திருந்தன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |