26-08-2022
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) கையெழுத்திட்டார்.
வரும் காலத்தில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் எந்தவொரு கருத்தை தெரிவிக்கவோ செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையுடன் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்குத் தேவையான பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு நீதி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்தமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2021 ஜனவரி 12 ஆம் திகதியன்று ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்பு கோரி, ரஞ்சன் ராமநாயக்க சத்தியக் கடதாசியொன்றை நேற்று (25) நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
தான் தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் பிழையானவை என்றும் அந்தக் கருத்துக்களினால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறையினர் அனைவருக்கும் அகௌரவம் ஏற்பட்டமைக்காக மன்னிப்புக் கோருவதாகவும் குறித்த சத்தியக் கடதாசி மூலம் தெரிவித்திருந்தார்.
தான் கூறிய கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவற்றை மீளப் பெறுவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிக்கமாட்டேன் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த சத்தியக்கடதாசியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: