Home » » கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை யூலை 22 முதல் ஆகஸ்ட் 05வரை திறந்திருக்கும்

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை யூலை 22 முதல் ஆகஸ்ட் 05வரை திறந்திருக்கும்


 (வி.ரி. சகாதேவராஜா)


வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும்
பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 22ஆம் திகதி
திறக்கப்படும்.

மீண்டும் அது ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி மூடப்படும்.

இவ்வாறு அம்பாறைமாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தலைமையிலான மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் மற்றும் காட்டுப் பாதை திறப்பு தொடர்பிலான முன்னோடிக்கூட்டம் வெள்ளிக்கிழமை (1) பகல் உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்வரும் 22ம் திகதி உகந்தை முருகன் ஆலயத்தில் காலை 6 மணிக்கு இடம்பெறும் பூசை வழிபாடுகளை தொடர்ந்து காலை 7 மணிக்கு உத்தியோக பூர்வமாக காட்டுவழிப்பாதை யாத்திரிகர்களுக்காக திறந்துவிடப்பட இருக்கின்றது.

அன்றைய தினம் பி.ப 3 மணிக்கு மூடப்படும் பாதை தொடர்ந்து வரும் 14 நாட்கள் அதாவது ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி வரை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 3 மணிக்கு மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழாஉற்சவம் இம் மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி
தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.

அதேவேளை உகந்தை மலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா
உற்சவம் இம் மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருக்கிறது.

மேற்படிகூட்டத்தில் அம்பாறை அரச அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் மொனராகல மாவட்ட செயலக பிரதிநிதி அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் பாணமை விகாராதிபதி வண.சந்திரரத்ன ஹிமி ஆலயதலைவர் சுதுநிலமே திசாநாயக
பொத்துவில், லாஹூகல, ஆலயடிவேம்பு ஆகியவற்றின் பிரதேச செயலாளர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸ் பிரதிநிதி, வன இலாகாவின் பிரதிநிதி, பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, லாஹூகல பிரதேச சபையின் பிரதிநிதி, நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் பிரதிநிதி, மொணறாகலை மாவட்ட செயலகத்தின் பிரதிநிதி ஆகியோருடன் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், எரிபொருள் மற்றும் வளப்பற்றாக்குறைகள் இருக்கின்றபோதும் யாத்திரிகர்களின் தேவைகளை பூர்த்திசெய்கின்ற வகையில் திணைக்களங்கள் அர்ப்பணிப்பான சேவையை வழங்க முன்வந்திருப்பதாகவும் யாத்திரிகர்கள் குடிநீர் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்தி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு .

காட்டுப்பாதை இம் மாதம் 22ஆம் திகதி முதல் 14நாட்கள் திறந்திருக்கும்.

அக்காலப்பகுதியில் காட்டுப்பாதையால் பயணிப்போர் பொலித்தீன்பாவனையை முற்றாகத் தடைசெய்யவேண்டும். அன்னதானம் வழங்குவோர் பார்சலில் வழங்கமுடியாது. மாறாக ஆலய அனுமதியுடன் பீங்கானில் வழங்கவேண்டும்.

ஆலயத்திற்கு வரும் அடியார்கள் பாதயாத்திரீகர்கள் அனைவருக்குமாக 31
தண்ணீர்த்தாங்கிகள் வைக்கப்படவேண்டும்.இராணுவம் விசேடஅதிரடிப்படை  இதற்கு
பொறுப்பாக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் ஆலையடிவேம்பு மற்றும் லாகுகல
பிரதேசசபைகள் தண்ணீர்பவுசர்களை வழங்கும். அம்பாறைக்கச்சேரியும் ஒரு
வவுசரை வழங்கும்.

விசேடஅதிரடிப்படை இராணுவம் தண்ணீரை நிரப்பிவைக்கும்.
காட்டுப்பாதையால் செல்லும் யாத்திரீகர்களுக்கான பாதுகாப்பை பொலிஸ்
வனஜீசராசிகள் திணைக்களம் இராணுவம் என்பன இணைந்து வழங்கும்.

உகந்தயையடுத்துள்ள குமண பறவைகள் சரணாலய முன்றலில் யாத்திரீகர்கள் கணக்கெடுப்பொன்றுக்கு உள்ளாக்கப்படுவார்கள் இறுதியாக 2020 ஆம் ஆண்டில் சுமார் 25ஆயிரம்
பாதயாத்திரீகர்கள் பயணித்துள்ளனர்.

எனினும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இக் காட்டுப் பாதை திறக்கப்படவில்லை. ஆதலால் பாதை காடுமண்டிக்காணப்படும். அத்துடன் மிருகங்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் இராணுவ பாதுகாப்பு மேற்கொள்ளப் படவுள்ளன.

இதேவேளை இவ்வாண்டு மேலும் ஆயிரக்கணக்கான அதிக அளவான பக்தர்கள் பாதயாத்திரையில் பயணிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இராணுவமும் வனஜிவராசிகள் திணைக்களமும் இணைந்து இக்கணக்கெடுப்பை எவ்வித கெடுபிடியுமின்றி நடாத்துவர்.

உகந்தை மலை முருகன் ஆலயவளாகத்தில் மின்சார வசதி சுகாதாரவசதி யாத்திரீகர்களுக்கு நிறைவாக ஏற்படுத்திக்கொடுக்கப்படும். மலசலகூடவசதியும் சுத்தமாக வழங்கப்படும்.போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

உகந்தை முருகனாலய சூழலை சுத்தப்படுத்த சிரமதானம்செய்ய விரும்புவோர் எதிர்வரும் 20ஆம் திகதி ஆம் திகதிக்கிடையில் தமது பணிகளை
பூர்த்திசெய்துமுடித்துவிட வேண்டும்.

மேலும் பல கருத்துக்கள் பரிமாறப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |