நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அரசுக்கெதிராக பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
இவ்வாறான நிலையில், நேற்றைய தினம் குருநாகல் பகுதியில் அரசுக்கெதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களை பொலிஸார் நகர விடாது தடைகளை வைத்து மறித்துள்ளனர். மீறி செல்ல முற்படும் பட்சத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் பொலிஸாருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
நாங்கள் உங்கள் பிள்ளைகள். உங்களுக்காகவும் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எம்மோடு நீங்களும் இணையுங்கள். உங்களுடைய வீட்டில் ஒருபோதும் எரிவாயு முடிவடையாதா. உங்களுக்காக போராட்டத்தினை மேற்கொள்ளும் உங்கள் பிள்ளைகளான எம்மீது தாக்குதல் நடத்துவது நியாயமா எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதன்போது கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் குறித்த இளைஞர்களின் கருத்தால் கண் கலங்கி அழுதுள்ளார். அப்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞரொருவர் பொலிஸ் உத்தியோகத்தரை கட்டியணைத்து சமாதானம் செய்துள்ளார்.
இது தொடர்பிலான காணொளி தற்போது பொதுமக்களிடத்தில் அதிகளவு பகிரப்பட்டு காண்போரின் கண்களை கலங்க வைத்துள்ளது.
0 comments: