நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்குட்பட்ட, சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட பேராசிரியர் பூஜித விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தடுப்பூசி வழங்கலினூடாக கொவிட் தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இதுவரையில் தடுப்பூசி வழங்கப்படவில்லை.
அவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டுமெனில் பெற்றோர், மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.
அதே போன்று 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதும் அத்தியாவசியமானதாகும்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதால் ஏற்படக் கூடிய பக்க விளைவுகள் இலங்கையில் மிகக் குறைவாகும்.
எனவே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கொவிட்19 தொற்றுக்குள்ளானாலும் அவர்களுக்கு அறிகுறிகள் தென்படும் வீதம் மிகக் குறைவாகும். சில சந்தர்ப்பங்களில் அறிகுறிகளின்றியும் இருக்கலாம்.
எவ்வாறிருப்பினும் பாடசாலை ஆரம்பமானதன் பின்னர் இந்த நிலைமை மாற்றமடையலாம். எனவே தான் அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
அதேவேளை 12 வயதுக்குட்பட்ட, நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது. எவ்வாறிருப்பினும் இவை தொடர்பில் இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றார்.
0 Comments