Home » » அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

 


நாட்டில் அத்தியாவசிய மருந்துகள் 3-6 வாரங்களுக்கு மட்டுமே உள்ளதாக இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் மன்றத்தின் தலைவர் சஞ்சீவ விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நடைமுறைச் சாத்தியமற்ற விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் டொலர் நெருக்கடி என்பன இந்த மருந்துகளின் தட்டுப்பாட்டுக்கு காரணமாக அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (மார்ச் 02) நடைபெற்ற இலங்கை மருந்துக் கைத்தொழில் மன்றத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே விஜேசேகர இவ்வாறு தெரிவித்தார்.

போக்குவரத்தில் உள்ள சவால்கள் மற்றும் மருந்துகளுக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற உலகளாவிய பிரச்சினைகளால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (என்எம்ஆர்ஏ) மருந்துப் பொருட்களின் மறுபதிவு மற்றும் புதிய மருந்துகளை சந்தையில் குறிப்பிடத்தக்க காலத்திற்கு பதிவு செய்வதை தேவையில்லாமல் தாமதப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.

மருந்துப் பதிவுக் கட்டணம் முந்தைய விலையை விட பதினொரு மடங்கு அதிகம் என்றும் அதனால் என்எம்ஆர்ஏவின் சேவையில் திருப்தி அடைய முடியாது என்றும் தலைவர் கூறினார்.

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வங்கிகள் அனுமதியளித்து கடன் கடிதங்களை வழங்காததால் இந்த நிலை மேலும் மோசமாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

எரிபொருள் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள மின்வெட்டு உள்ளிட்ட விடயங்களில் அனைவரும் கவனம் செலுத்தியுள்ள நிலையில் மருந்துப் பொருட்களுக்கான கவனம் குறைக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |