மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 500 பேரினை அழைத்துக் கொண்டு அனுராதபுர மாவட்டத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபட நாம் அங்கு சென்றால் அனுராதபுரத்திலுள்ளவர்கள் காணி வழங்குவார்களா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “குடும்பத்தில் மூத்த பிள்ளைக்கு காணி உரிமையினை வழங்க காணி அபிவிருத்தி சட்டத்தில் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது. மூத்தப்பிள்ளை ஆண் பிள்ளையா அல்லது பெண்பிள்ளையா என்று கருதாமல் மூத்தபிள்ளைக்கு காணி உரிமையை வழங்குவது காலத்தின் தேவையாகும்.
காணி அபிவிருத்தி சட்டத்தின் 4ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை மிக நுணுக்கமாக ஆராய வேண்டும். காணி உறுதிப்பத்திரம் உள்ளவர்கள் பிரதேச செயலகத்தின் அனுமதி இல்லாமல் பத்திரத்தை நிதி நிறுவனங்களில் அடகு வைக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
சேதன பசளை திட்டத்தினால் நாட்டின் முழு விவசாயமும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடனாளியாகியுள்ளார்கள். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தங்களின் காணிகளை நிதி நிறுவனங்களிடம் அடகு வைத்து மீட்க முடியாத நிலைமை தோற்றம் பெறும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 35 சதவீதத்திற்கும் அதிக வட்டி வீதத்தில் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் உள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நுண்கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பலர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்கள். ஆகவே காணி அபிவிருத்தி சட்டத்தில் காணப்படும் பாதகமான விடயங்கள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கு மாத்திரம் ஏன் காணி பிரச்சினை காணப்படுகிறது என ஒருசிலர் கேள்வி எழுப்புவதை அவதானிக்க முடிகிறது.
காணி விவகாரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், ஏனைய மாகாணங்களுக்கும் இருவேறுப்பட்ட சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வனப்பகுதிகளை அண்மித்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல ஆண்டுகாலமாக விவசாய நடவடிக்கையில் ஈடுப்பட்டவர்களை அவர்களின் காணிகளுக்கு செல்ல விடாமல் வனவள அதிகாரிகள் தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
வனப்பகுதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஒரு நீதி ஏனை மாகாணங்களுக்கு பிறிதொரு நீதி செயற்படுத்தப்படுவது எவ்வாறு நியாயமாகும். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர்கள் பயிர்ச்செய்கையினை மேற்கொள்ள காணிகளை வழங்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்காமல் அனுராதபுரத்தில் உள்ளவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் உள்ள காணிகளில் சிங்கள மக்களை குடியேற்ற அனைத்து நவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மகாவலி, வன இலாகா, தொல்லியல் திணைக்களம் என அனைத்து வழிகளினாலும், காணிகள் துண்டாடப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் மரமுந்திரி செய்கை என்ற பெயரில் 500 பேர் வரை, வெளிமாவட்ட நபர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதே போல நீங்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 500 பேரை அனுராதபுரத்தில் அனுமதிப்பீர்களாக?.
அரசாங்கம் சம்மதம் தெரிவித்தாலும், மக்கள் விட மாட்டார்கள். ஏன் என்றால் எமது நிலம் எமக்கு வேண்டும் என்பதில் அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள். இதற்காகத் தான் காணி அதிகாரங்களை மாகாணசபைக்கு தருமாறு கோருகின்றோம். கிழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சேனைப் பயிர் செய்தவர்களை விரட்டுகிறீர்கள்.
முல்லைத்தீவில் குறுந்தூர் மலையில் சூலத்தை இழுத்து எறிந்து, புத்தர் சிலையை வைக்கிறீர்கள். உங்கள் பிரதேசத்தில் நாம் ஏதும் இப்படி செய்கிறோமா? 1970 மற்றும் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயற்றப்பட்ட மகாவலி சட்டத்தின் பிரகாரம் அனைத்து இன மக்களுக்கும் மகாவலி காணி வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மகாவலி சட்டத்திற்கமைய சிங்கள மக்களுக்கு 90வீதமான காணிகள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகாவலி காணிகளை பிறிதொரு தரப்பினருக்கு வழங்கும் முயற்சியை கிழக்கு மாகாண ஆளுநர் முன்னெடுத்து வருகிறார்.
நாட்டில் டொலர் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. கறுப்பு சந்தை வியாபாரம் எல்லை கடந்து சென்றுள்ளது. டொலர் நெருக்கடியினால் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. எதிர்வரும் நாட்களில் 20 சதவீதமான அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க கூடும். வெளிநாடுகளில் பிள்ளைகளை கல்வி கற்பதற்காக அனுப்பி வைத்துள்ள பெற்றோர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண உரிய நடவடிக்கையினை முன்னெடுங்கள் என அரசாங்கத்திடம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தினோம். அரசாங்கம் எமது கருத்தை கவனத்திற்கொள்ளவில்லை. அரசாங்கத்தில் அங்கம் வகித்த பங்காளி கட்சிகள் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக கருத்துரைக்கிறார்கள். மூழ்கும் கப்பலில் இருந்து தப்பிக்க முயற்சிப்பது நன்கு விளங்குகிறது.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் ஊடாக அமெரிக்க பிரஜையை நாடாளுமன்றிற்கு கொண்டு வரும் போது பங்காளி கட்சிகள் விளைவை கவனிக்கவில்லையா?. பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டுமாயின் பஷில் ராஜபக்ஷவை கொண்டு வர வேண்டும் அவருக்கு நிதியமைச்சு பதவியை வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்கள்.
தற்போது பொருளாதாரத்தை சீரமைக்க முடிந்ததா. எதிர்வரும் நாட்களில் மத்திய வங்கியின் ஆளுநரையும் பொதுஜன பெரமுன அரசாங்கம் பதவி நீக்கும். நாட்டு மக்களை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தான் உண்மையான பயங்கரவாதிகள்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்
0 comments: