ஆசிரியர்களின் நியாயமான போராட்டங்களை முறியடிக்கவேண்டும் என்பதற்காக நடாத்தப்பட்ட இடமாற்றமே கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்றம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் மாவட்ட பொதுச்செயலாளருமான பொன்.உதயரூபன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நேற்றைய தினம் தேசிய பாடசாலையான மட்டு. சிவானந்தா பாடசாலையின் அதிபரை மாணவர்களும் ஆசிரியர்களும் முற்றுகையிட்டு அவர்களுடைய கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்தது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கமானது மிகவும் மனவேதனையுடன் தனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது.
இது தொடர்பாகக் கடந்த மாதம் 6ஆம் திகதி அங்கே நடைபெற்ற ஒரு அசாதாரண சூழ்நிலை காரணமாகப் பாடசாலையின் கல்வி நடவடிக்கையைக் குழப்பும்விதமாக சில அரசியல்வாதிகளின் குண்டர்களினால் பாடசாலையினுடைய கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்தது.
இதைத் தொடர்ந்து 10ஆம் திகதி சகல ஆசிரியர்களும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரபல பாடசாலைகளும் தமது கண்டனத்தைத் தெரிவித்து பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர்.
அங்கு ஒரு ஆசிரியர் தாக்கப்பட்டு அவர் வைத்திய சிகிச்சையின் பின்னர் மீண்டும் தனது பணிக்குத் திரும்பியபோது தனது பணிக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாத காரணத்தினால் 10ஆம் திகதியன்று ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தவேண்டிய நிலையில் ஆசிரியர்கள் இருந்தார்கள்.
மூன்று ஆசிரியர்கள் ஊடகங்களுக்கு தமது கருத்துக்களைத் தெரிவித்த காரணத்திற்காகவும் அந்த ஆசிரியர்கள் சாத்வீகப் போராட்டத்தின் நியாயத்தைத் தெளிவுபடுத்திய காரணத்திற்காகவும் இந்த மூன்று ஆசிரியர்களுக்கும் கல்வி அமைச்சினால் உடனடியாக செயற்படும்வண்ணம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பாகக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.
மேலதிக செயலாளர் சுபோதினியினால் இந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. கடிதத்தில் குறிப்பிட்டதன் படி தாக்குதலுக்கு உள்ளான திருமதி.மனோகரன் என்ற ஆசிரியை துறைநீலாவணை தேசியப் பாடசாலைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்.
இந்தத் துறைநீலாவணை பாடசாலையானது கல்வியமைச்சின் இடமாற்ற சபைக்குள் இன்னும் உள்வாங்கப்படாமல் இருக்கின்றது. தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கின்ற இந்த ஆசிரியையை துறைநீலாவணைக்கு அனுப்பி ஏனைய ஆசிரியர்களையும் இந்த வலயத்தைவிட்டு வெளியேற்றியிருக்கின்றார்கள்.
இவ்வாறான நடவடிக்கைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு ஏனைய ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் அச்சமூட்டும் நிலைமையை ஏற்படுத்தி அவர்களின் நியாயமான போராட்டங்களையும் கருத்துச் சுதந்திரத்தையும் முறியடிக்க வேண்டுமென்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகவே இந்த இடமாற்றத்தை நாங்கள் கருதுகின்றோம்.
மூன்றாந் தவணைக்குரிய கற்றல் செயற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளராகிய நானும் இன்னுமொரு ஆசிரியரான திருமதி.மனோகரனும் விஞ்ஞான ஆசிரியர்கள் இருவரும் வேறு வலயங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதால் அங்கு கற்றல் செயற்பாடுகள் முழுமையாக முடக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் குண்டர்கள் கல்வி அமைச்சிற்குச் சென்று இந்த ஆசிரியர்களை மாற்றும்படி கேட்டிருக்கின்றார்கள். இதன் பின்னணியில் சில அரசியல்வாதிகளின் தூண்டுதல் காரணமாகவும் கல்வி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிப்படைந்திருப்பதனை இலங்கை ஆசிரியர் சங்கமானது வன்மையாகக் கண்டித்து கல்வி அமைச்சிற்கு உடனடியாக செயற்படும் வண்ணம் இடமாற்றத்தை இரத்து செய்யும் வகையில் செயலாளரினால் கல்வி அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் துணை அபிவிருத்திக்குழுத் தலைவராக இருக்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் நேரடியாக இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்பதையும் இக்கடிதத்தின் மூலமாக பொதுச் செயலாளர் கண்டிருக்கின்றார்.
இதேவேளை அவர் சிறையிலிருந்தபோது சிவானந்தா தேசியப் பாடசாலை தொடர்பாக ஒரு அறிக்கையினை வெளியிட்டதாக இங்கு இருக்கின்றது. இந்த அறிக்கையில் சிவானந்தா தேசிய பாடசாலையின் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாகக் குறிப்பிடப்படுகின்றது. இதனை மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
எனவே மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களே சிவநேசதுரை சந்திரகாந்தனின் பெயரைப் பயன்படுத்தி விட்டிருக்கின்றார் என்பதைச் சகல ஆதாரங்களுடன் நிரூபிக்க முடிகின்றது.
இவ்வாறான செயற்பாடுகளில் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளரும் இணைந்து செயற்படுவதை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்து மாவட்டத்தில் அச்சமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து ஆசிரியர்களையும் enaiyavarka பாதுகாக்க வேண்டிய கடமை அரசிற்கு இருக்கின்றது.
மூன்றாம் தவணையில் பெரும்பாலான ஆசிரியர்கள் இடமாறப்பட்டிருக்கின்றார்கள். எந்த வலயத்திலும் இடம்பெறாத இடமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகளில் மேலும் குழப்பமான ஒரு நிலையை மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏற்படுத்தியிருக்கின்றார்.
கிழக்கு மாகாணத்தின் மாகாணக் கல்விப் பணிப்பாளர் உட்படக் கிழக்கு மாகாண ஆளுநர் உடனடியாக செயற்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எங்களுடைய நியாயமான போராட்டங்களை முறியடிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்வதைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அங்கிருக்கின்ற அதிபர் ஒரு அரசியல்வாதியின் கைக்கூலியாக இருப்பதனால் மாணவர்களின் கல்விக்கு குழப்ப கரமான நிலை ஏற்பட்டிருக்கின்றது. மட்டக்களப்பில் பாடசாலைகளில் குழப்பங்களை ஏற்படுத்துபவர்களைச் சட்டத்தின் முன்பாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்த அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
0 Comments