( வி.ரி.சகாதேவராஜா)
வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயத்தின் 125ஆவது ஆண்டு ஓராண்டு தொடர் விழாவின் துவக்கவிழா இன்று(17)திங்கட்கிழமை இ.கி.மிசன் ஏற்பாட்டில் கல்லடி சுவாமி விபுலாநந்தமணி மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
உலகளாவியரீதியில் ஜீவசேவையாற்றிவரும் ஸ்ரீ ராமகிருஸ்ண மிசனை ஸ்தாபித்த வீரத்துறவி வங்கத்தின்சிங்கம் சுவாமி விவேகானந்தர் இலங்கைத் திருநாட்டிற்கு வருகை தந்து (15.01.2022) 125ஆண்டுகளாகின்றன.
சுவாமி விவேகானந்தர் 1897ம் ஆண்டு ஜனவரி 15ந்திகதி வருகை தந்திருந்தார். அவர் இலங்கையில் கொழும்பு யாழ்ப்பாணம் கண்டி அனுராதபுரம் மாத்தளை போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்து 11 நாட்கள் தங்கியிருந்து ஆண்மிகஒளியேற்றினார்.
அவரது அந்த வரலாற்றுரீதியான விஜயத்திற்கு 125ஆண்டுகளாகின்றது. அதனையொட்டி இலங்கை இராமகிருஸ்ணமிஷன் கொழும்பு தொடக்கம் மட்டக்களப்பு காரைதீவு ஈறாக பல இடங்களில் நினைவுதின விழாக்களை ஏற்பாடுசெய்துள்ளது.
இவ்விழாக்களுடன் ஓராண்டு காலத்திற்கு அதாவது அடுத்த ஆண்டு(2023) ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை பலவித நிகழ்ச்சிகளை கிரமமாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
துவக்கவிழா!
அந்த அடிப்படையில், இன்று காலை 9.30மணிக்கு ஆரம்பமாகும் முதல்விழாவில் மட்டு.இ.கி.மிசன் துணைமேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ்ஜின் வரவேற்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.
பிரதம அதிதியாக கிழக்குமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா கலந்துசிறப்பிக்க, சிறப்புரையை மட்டு.மாநகர முதல்வர் தி.சரவணபவன் நிகழ்த்துவார்.
விசேட சிறப்புப்பேருரையை யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவஸ்தான தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் நிகழ்த்தவுள்ளார்.
பல்வேறுபட்டகலைநிகழ்ச்சிகள் மேடையேறவுள்ள அதேதருணம் கோப்பாய் ஸ்ரீ சுப்பிரமணியகோட்டத்தலைவர் ஆன்மீகச்சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் சொற்பொழிவாற்றவுள்ளார்.
மட்டு.இ.கி.மிசன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்த ஜீ மஹராஜ்ஜின் நன்றியுடன்கூடிய நிறைவுரை இடம்பெறும்.
நேற்று(16)கொழும்பில் குறித்த விழாவின் தேசிய துவக்கவிழா இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள ஏற்பாட்டில் நடைபெற்றமை தெரிந்ததே.
0 Comments