நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்பாராத அளவில் கொவிட் 19 தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக கொவிட் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான எழுமாற்று கொவிட் பரிசோதனையை அதிகரிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
"இது தொடர்பில் நேற்றைய தினத்தில் சுகாதார செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, எழுமாற்று கொவிட் பரிசோதனையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளுக்கு வரும் அனைவரையும் கொவிட் தொற்றாளர்களாக கருதி பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரதேசங்களில் எழுமாற்றாக பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொவிட் தொற்று வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பில் விசேடமாக கவனம் செலுத்த வேண்டும். அனைவரும் இது தொடர்பில் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்" என்றார்
0 comments: