Home » » நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த குழு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த குழு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!


 ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நௌபர் மௌலவி இந்த ஆண்டு நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் தலைமைத்துவத்தின் காரணமாக திட்டமிட்டபடி நடக்க முடியாமல் போனமை விசாரணைகளில் தெரியவந்ததாக தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரொஹான் குணரத்ன ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்

மேலும் நௌபர் தற்போது காவலில் உள்ளார் என்றும் விரைவில் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2021இல் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள், திட்டத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு உறுப்பினரும் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் காவலில் இருப்பதால் அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இஸ்லாமிய அரசை விரிவுபடுத்துவதற்கும் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல்களை நடத்துவதற்கும் நௌஃபர் மௌலவி சித்தாந்தம் கொண்டிருந்ததாகவும், ஆனால் உடனடியாக தாக்குதல் நடத்த விரும்பிய சஹ்ரானுடன் சர்ச்சையை எதிர்கொண்டதாகவும் தெரிவித்த அவர், அவர்களின் அணுகுமுறைகள் வேறுபட்டவை என்றும் கூறினார்.

மார்ச் 2019 இல் கிறிஸ்ட்சர்ச்சில் இடம்பெற்ற மசூதித் தாக்குதலுக்குப் பின்னர்,  ஈஸ்டர் தாக்குதல்களை உடனடியாக நடத்தத் தயாராகுமாறு சஹ்ரான் தனது குழுவிற்குத் தெரிவித்தமை விசாரணைகளில் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

விசாரணைகளின்படி, மாகாணங்களில் இரண்டாவது அலை தாக்குதல்களுக்கு சஹ்ரானின் குழு திட்டமிட்டிருந்த இலக்குகளில், அவர்கள் சுதந்திர தின கொண்டாட்டங்கள் உள்ளிட்டவற்றை கண்காணித்ததற்கான ஆதாரங்களும் வெளிவந்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காத்தான்குடியில் சூஃபி முஸ்லிம்களுடன் மோதலுக்குப் பின்னர் சஹ்ரான் தலைமறைவாகிய பின்னர், தேசிய தௌஹீத் ஜமாத்தை வழிநடத்திய தனது சகோதரர் ஜைனி மௌலவியிடம் சஹ்ரான் இரண்டாவது அலை தாக்குதல்களை ஒப்படைத்தார் என்றும் விசாரணைகளில் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சஹ்ரானின் சகோதரர்களான ஜைனி மற்றும் ரில்வான் கண்டி எசல பெரஹரா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தமைக்கான ஆதாரங்களும் வெளியாகியுள்ளன எனவும் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்தார்.

விசாரணைகளின்படி, கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் வெடிக்கச் செய்த தற்கொலைக் குண்டுதாரியான ஹஸ்துன், இலக்குகளை இணையத்தில் கண்காணித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது தாக்குதலுக்கு இலக்கானவர்களில் மட்டக்களப்பு தேத்தாத்தீவு  தேவாலயம் எனப்படும் யூதாஸ் ததேயுஸ் தேவாலயமும் இருந்தது, இது ஹஸ்துனின் மனைவியான சாரா ஜாஸ்மினின் ஸ்மார்ட்போன் மூலம் கண்காணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தேவாலயத்தில் சாரா ஜாஸ்மின் மதம் மாறுவதற்கு முன்பும், ஐ.எஸ். சித்தாந்தத்தை எடுத்துக்கொள்வதற்கும் முன்பும் வழிபாட்டிற்குச் சென்றதாக சஹ்ரானின் மனைவி ஹதியா, பொலிஸ் உளவுத்துறை அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியதாக ரொஹான் குணரத்ன தெரிவித்தார்.

இரண்டாம் அலை தாக்குதல்கள் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கும் என்றும் ஈஸ்டர் தாக்குதல் குழுவைவிட இரண்டாவது தாக்குதல் குழு பெரியதாக இருந்ததாகவும் ரொஹான் குணரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டறிந்த அப்பகுதி முஸ்லிம்களின் உதவியின் பேரில், அம்பாறையில் உள்ள அவர்களது பாதுகாப்பு இல்லத்தை பொலிஸாரும் இராணுவமும் சுற்றி வளைத்தபோது, ​​இரண்டாவது தாக்குதல் குழு உறுப்பினர்கள் 2019 ஏப்ரல் 26 அன்று சாய்ந்தமருது பாரிய தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தனர் என்றும் அவர் குறிப்பாட்டார்.

முஸ்லிம்களின் உதவி இல்லாவிட்டால், இந்த மக்கள் அன்றைய தினம் பிடிபடாமல் இருந்திருக்கலாம் என்றும் பேராசிரியர் குணரத்ன கூறினார்.

பாரிய தற்கொலை சம்பவத்தன்று இரவு, சாய்ந்தமருதில் சாரா ஜாஸ்மின் மற்றும் சியோன் தேவாலய குண்டுதாரியின் மனைவி பெரோசா உட்பட 17 பேர் இருந்தனர் என்றும் பாதுகாப்பு இல்லத்திற்குள் தற்கொலை குண்டுகள் வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சஹ்ரானின் மனைவி ஹதியா தனது மகளுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார் என்றும் அவர் கூறினார்.

மேலும் சாரா ஜாஸ்மின் பாரிய தற்கொலை தாக்குதலில் கொல்லப்படவில்லை என்ற வதந்திகள் பரவியதை அடுத்து, சாரா ஜாஸ்மின் கொல்லப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் சகல சடலங்களையும் தோண்டி எடுத்து, சாரா ஜாஸ்மினின் தாயாரின் டி.என்.ஏ.வுடன் பரிசோதிக்குமாறு பொலிசார் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளதாக பேராசிரியர் குணரத்ன தெரிவித்தார்.

இந்த நிலையில், நீதிமன்ற அனுமதி கிடைத்தால், அதிகாரிகள் மறுபரிசீலனை செய்து அவரது மரணத்தை உறுதிப்படுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பாட்டார்.

ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து, தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் இரண்டாவது தாக்குதல் அலையைத் திட்டமிட்ட அனைவரையும் கைது செய்துள்ளதாகவும் மேலும் தாக்குதல்களை விரும்பாத முஸ்லிம் சமூகத்தினரே சந்தேக நபர்களுக்கு எதிரான பெரும்பாலான தகவல்களை வழங்கியதாகவும் பேராசிரியர் குணரத்ன தெரிவித்தார்.

இராணுவ புலனாய்வு மற்றும் அரச புலனாய்வு இயக்குனரகத்தில் பணிபுரியும் சட்ட அமலாக்க அதிகாரிகளால் எடுக்கப்பட்ட தீர்க்கமான நடவடிக்கை காரணமாக, விரைவான கைதுகள் மற்றும் தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து இன்று பயங்கரவாத அச்சுறுத்தல் வெகுவாகக் குறைந்துள்ளதாக பேராசிரியர் குணரத்ன மேலும் தெரிவித்தார்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |