அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்த 21 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எப்.எம்.ஏ.காதர், இன்று (14) தெரிவித்தார்.
விசேட டெங்கொழிப்பு வாரத்தையொட்டி, அக்கரைப்பற்று பிரதேசத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், டெங்கொழிப்பு செயலணியினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து வீடு வீடாகச் சென்று சோதனையில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
சுமார் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்த 21 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், 48 நபர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டவர்கள், ஒரு வார காலத்துக்குள் சுற்றுப் புறச் சூழலை துப்புரவு செய்யுமாறும், அதனை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
வெற்றுக் காணிகளை வைத்திருப்போர், அக்காணிகளில் டெங்கு நுளம்பு பெருகுவதை தடுக்கும் பொருட்டு, ஒரு வார காலத்துக்குள் துப்புரவு செய்ய வேண்டுமெனவும் இதனை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
தற்போது பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் பொதுமக்கள் டெங்கு நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப் புறச் சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமெனவும், கேட்டுள்ளார்.
வாரத்தில் ஒரு நாள் பொதுமக்கள் தங்களது வீடுகளையும் சுற்றுப்புறச் சுழலையும் துப்புரவு செய்ய வேண்டுமெனவும், டெங்கொழிப்பு தொடர்பான ஆலோசனைகள் தேவைப்படும் பட்சத்தில், சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாமென அறிவித்துள்ளார்.
0 Comments