Home » » கடைசி ஆயுதமும் புஷ்வாணமாகியது!! வெளிச்சத்திற்கு வந்த நிகழ்ச்சி நிரல்

கடைசி ஆயுதமும் புஷ்வாணமாகியது!! வெளிச்சத்திற்கு வந்த நிகழ்ச்சி நிரல்

 


பசில் ராஜபக்சவும் (Basil Rajapaksa) ஞானசார தேரருடன் (Galagoda Aththe Gnanasara) உள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. இதனால், அரசுக்கு ஆதரவளித்த முஸ்லிம் உறுப்பினர்களின் கடைசி ஆயுதமும் புஷ்வாணமாகியுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Maharoof) தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று(30)ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளிட்ட அவர்,

“ஆளும் கட்சி கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம். அதாவுல்லா (A. L. M. Athaullah), ஞானசார தேரர் தொடர்பாக வெளியிட்ட கருத்தையும் அதற்கு அமைச்சர் பசில் ராஜபக்ச வழங்கிய பதிலையும் ஊடகங்கள் வாயிலாக அறிய கிடைத்தது.

இது தொடர்பாக பசில் ராஜபக்ச அளித்த பதிலில் இருந்து, அவரும் ஏனைய ராஜபக்சர்களைப் போல் ஞானசார தேரருடனேயே உள்ளார் என்பது தெளிவாக தெரிந்தது.

அரசுக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசில் ராஜபக்ச இனவாதமற்றவர், முஸ்லிம்களுக்கு சார்பானவர், அவர் அரச தலைவரானால் இனவாதிகளை அடித்து விரட்டி விடுவார் என்ற பிரசாரத்தையே இதுவரை காலமும் முன்னெடுத்து வந்தனர்.

இவ்வாறு அடுத்த தேர்தலில் பசில் ராஜபக்சவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அவர்கள் வைத்திருந்த கடைசி ஆயுதமும் இதன்மூலம் புஷ்வாணமாகிவிட்டது.

பசில் ராஜபக்ச உட்பட அனைத்து ராஜபக்சர்களும் ஞானசார தேரரின் பின்னால் உள்ளனர். ராஜபக்சர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலையே ஞானசார தேரர் நிறைவேற்றுகிறார்.

இதுவரை காலமும் வாயை மூடியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா இப்பொழுதாவது வாயை திறந்திருப்பது பாராட்டுக்குரியது.

அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை,அவர் எதிர்பார்த்த சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தும் இருபதாம் திருத்தச் சட்டமூலத்துக்கு வாக்களித்தார், துறைமுக நகர சட்டமூலத்துக்கு ஆதரவளித்தார். காதி நீதிமன்றம், மாடறுப்புத் தடை எனப் பல சட்டமூல திருத்தங்கள் தொடர்பாக பேசப்பட்டபோதும் அமைதியாக இருந்தார்.

ஆனால் தொடர்ந்தும் இவ்வாறு அமைதியாக இருந்தால் தனது அரசியல் இருப்பே கேள்விக்குறியாக மாறிவிடும் என உணர்ந்து இப்போது பேசியுள்ளார்.

அத்துடன் சீனாவுக்கு துறைமுக நகரம், இந்தியாவுக்கு மேற்கு முனையம் என வழங்கப்பட்ட போது அமைதியாக இருந்த அதாவுல்லா உட்பட விமல் கூட்டணி, அமெரிக்காவுக்கு மின்னுற்பத்தி நிலையத்தை வழங்கும்போது கூட்டாக எதிர்ப்பதின் பின்னணியில் சீனா உள்ளதா என்ற சந்தேகமும் நிலவுகிறது” என்றார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |