Advertisement

Responsive Advertisement

மீண்டும் ஒரு பாடசாலை கொத்தணி!

 


கொழும்பு மாவட்டத்துக்கு மாத்திரம் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கிவிட்டு பாடசாலையை ஆரம்பிக்க அரசாங்கம் முயற்சி செய்வது மீண்டும் ஒரு பாடசாலை கொரோனா கொத்தனியை உருவாக்குவதற்கா?என்ற கேள்வி உருவாகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


ஹட்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அரசாங்கத்தின் அறிவித்தலின்படி அடுத்து வருகின்ற நாட்களில் கொழும்பு மாவட்டத்தின் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் அதனை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்பதாக நிறைவு செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரியவருகின்றது.
இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.ஏனெனில் மாணவர்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.அப்படியானால் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசியை வழங்கிய பின்பு பாடசாலையை ஆரம்பிக்க வேண்டும்.

அப்படியில்லாமல் கொழும்பில் இருக்கின்ற மாணவர்களுக்கு ஒரு சலுகையும் ஏனைய மாணவர்களுக்கு ஒரு சலுகையையும் செய்ய முற்படுவது மிகவும் தவறான ஒரு செயற்பாடாகும்.

நான் முன்னாள் இராஜாங்க கல்வி அமைச்சர் என்ற வகையில் இந்தச் செயற்பாட்டை பிழையான ஒரு முன் உதாரணமாகவே கருதுகின்றேன்.மாணவர்கள் மத்தியில் தேவையற்ற பிரச்சினைகளை இது உருவாக்கும். எனவே அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தடவையில் அல்லது படிப்படியாக தடுப்பூசியை வழங்கிய பின்பு பாடசாலையை ஆரம்பிப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

இன்றைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் ஒரு புறம் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.அவர்களுடைய கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறான ஒரு நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது என்பது கேள்விக்குறியான சாத்தியமான செயற்பாடாகத் தெரியவில்லை.ஆசிரியர்களும் அதிபர்களும் இல்லாமல் எவ்வாறு பாடசாலைகளை ஆரம்பிப்பது என்ற கேள்வி எழுகின்றது.
எனவே இந்த அனைத்து விடயங்களையும் அரசாங்கம் கருத்தில் கொண்டு மாணவர்களின் நன்மை கருதி சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

Post a Comment

0 Comments