Home » » 5 பேரையும் பெற்றோலை ஊற்றிக் கொளுத்தினாரா சந்தேக நபர்?

5 பேரையும் பெற்றோலை ஊற்றிக் கொளுத்தினாரா சந்தேக நபர்?



நுவரெலியா - ராகலை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அதே குடும்பத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த தங்கையா என்பவரின் மகனான இரவீந்திரன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 7ம் திகதி இராகலை தோட்டம் முதலாம் பிரிவில் தற்காலிக தனி வீடு ஒன்றில் இரவு 10.15 மணியளவில் தீ விபத்து இடம்பெற்றது. இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகினர். இராமையா தங்கையா (வயது 61), அவரின் மனைவி செவனமுத்து லெட்சுமி (வயது 57), மகளான தங்கையா நதியா (வயது 34) இவரின் பிள்ளைகளான, துவாரகன் (வயது 13), மோகன்தாஸ் ஹெரோசன் (வயது 01) ஆகியோரே தீயில் கருகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நான்கு நாட்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. விசாரணையில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இராகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவீந்திரன் பெட்ரோல் வாங்கியுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், வீடு தீப்பற்றி எரிந்த போது அணைக்க வந்த மக்களிடம் வீட்டில் யாரும் இல்லையென பொய் கூறியதாகவும் பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரவீந்திரன் இன்று மதியம் கைது செய்யப்பட்ட நிலையில், வலப்பனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து சந்தேகநபரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |