Home » » “ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு 2022 பட்ஜட் மூலம் கட்டம் கட்டமாக தீர்வு”

“ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு 2022 பட்ஜட் மூலம் கட்டம் கட்டமாக தீர்வு”


 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்குக் கட்டம் கட்டமாகத் தீர்வு காணப்படும் என்று கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது, ஆசிரியர்களின் போராட்டங்கள் குறித்து, எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக பத்திரண (Buddhika Pathirana) எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பது வெறுமனே நிதிப் பிரச்சினை மாத்திரமல்ல. 1994ஆம் ஆண்டு ஆசிரியர் சேவை அரசமைப்பை அறிமுகப்படுத்தி சம்பளத்தை அதிகரித்தமையால் ஏற்பட்ட அரச சேவை முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு வி.சி.பெரேரா ஆணைக்குழுவை நியமித்த பின்னர் அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தைப் பின்தள்ளி ஏனைய அரச சேவைகளின் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க முற்பட்டமையால் ஏற்பட்ட பிரச்சினையாகும்.

ஆசிரியர் மற்றும் ஏனைய அரச சேவைகளுக்கு இடையிலான சம்பள முரண்பாடுதான் கடந்த 26 வருடங்களாக நிலவுகின்றது.

2018ஆம் ஆண்டு அமைச்சரவை உப குழுவின் சம்பள முறை தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை மற்றும் சுபேதினி குழுவின் சிபாரிசுகள் தொடர்பில் சம்பளம் மற்றும் சேவையாளர்கள் குழு தமது சிபாரிசுகளை இன்னமும் வழங்கவில்லை.

கோவிட் நெருக்கடியால் நிதி தொடர்பான பிரச்சினைகள் உள்ள அதேவேளை, ஏனைய அரச சேவைகளுக்குப் பாதிப்பில்லாது இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்ற தேவை அனைத்து அரசுகளுக்கும் இருந்தமையால் தான் கடந்த 26 வருடங்களாக இந்தப் பிரச்சினை தொடர்கின்றது.

அமைச்சரவை உப குழுவின் சாதகமான சிபாரிசுகளின் பிரகாரம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்று கொடுப்பது குறித்து அரசு அவதானம் செலுத்தியுள்ளது.

எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக கட்டம் கட்டமாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடிவெடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |