Advertisement

Responsive Advertisement

நாளை திங்கட்கிழமை இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: இரண்டு தொழிற் சங்கங்கள் எச்சரிக்கை!

 


எரிபொருள் விநியோக நடவடிக்கையை சனிக்கிழமை நாட்களில் மேற்கொள்வதை நிறுத்துவதற்கு எரிபொருள் விநியோகக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


இதன் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை காணப்படுவதாக வணிக சேவை தொழிற்சாலை மற்றும் முற்போக்கு சேவை சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார் தெரிவித்தார்.

தமது தொழிற்சங்கம் ஆரம்பித்திருக்கும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,கொவிட் -19 நிலைமையை காரணம் காட்டி சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திரகரிப்பு நிலையத்திலிருந்து சனிக்கிழமைகளில் எரிபொருள் விநியோகிப்பதை நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நிறுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எமது தொழிற்சங்கம் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டுக்குள் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை காணப்படுகிறது.

ஏனெனில் துறைமுகங்கள் உட்பட சில அத்தியாவசிய நிறுவனங்களுக்கு எரிபொருளை சேமித்து வைப்பதற்கு குறிப்பிட்டதொரு கொள்ளளவே உள்ளது. அது எமக்கு தெரியும். அதனால்தான் இதனை மேற்கொள்ளவேண்டாம் என நாங்கள் எடுத்துக் கூறினோம். ஆனால் எமது கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்தனர்.
சனிக்கழமை தினங்களில் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் சனி, ஞாயிறு இரண்டு தினங்கள் எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை.

இதன் காரணமாக நாளை (13) திங்கட்கிழமைக்கு நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகலாம் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறோம். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அதன் பொறுப்பை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments