ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
GSP+ சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே குறித்த குழு இலங்கை வரவுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 27 ஆம் திகதி குறித்த குழு இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு 2015ஆம் ஆண்டில் மீள வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீண்டும் இரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து பேச்சு நடத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேடக் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
கொழும்பில் அரசின் உயர்மட்ட தலைவர்களை சந்திக்கவுள்ள இந்த குழு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கும் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டம் முடிந்த கையோடு இந்த குழு இலங்கை வரவுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த விஜயத்தினிடையே தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களையும் இந்த குழு சந்திக்கவுள்ளது. ஸ்ரீலங்காவின் தற்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டிய ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான இந்த வரிச்சலுகையை இரத்து செய்திருந்தது.
எனினும் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீளளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஐ.நா மனித உரிமை பேரவைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் மற்றும் தற்போதைய ஜனநாயகவிரோத செயற்பாடுகள் அதேபோல அரசாங்கத்தின் அண்மைக்கான போக்குகளை சர்வதேச சமூகம் சவாலுக்கு உட்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இரத்து செய்யப்படும் அபாயம் தோன்றியுள்ளது.
இதுகுறித்து கொழும்பிலுள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களை ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கடந்த நாட்களாக சந்தித்து பேச்சு நடத்தியிருந்த நிலையிலேயே இறுதிக்கட்டப் பேச்சுக்களை நடத்தவும் இலங்கையில் காணப்படுகின்ற நிலைமைகளைக் கண்காணிக்கவும் ஐரோப்பியஒன்றியக் குழு இலங்கைக்கு விஜயம் செய்கின்றது.
எவ்வாறாயினும், ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வு இடம்பெற்று வருகின்ற இந்தத் தருணத்தில் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சறுத்திய ஸ்ரீலங்கா அமைச்சரை பதவிநீக்கம் செய்ததன் ஊடாக ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்புகூறும் கடப்பாட்டை ஆரம்பித்திருப்பதான ஒரு விம்பத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்
0 comments: