Home » » பால்மாவிற்கு வைத்திருந்த பணத்தை மதுபான விற்பனை நிலையங்களை திறந்து அரசாங்கம் சுரண்டியெடுத்துள்ளது

பால்மாவிற்கு வைத்திருந்த பணத்தை மதுபான விற்பனை நிலையங்களை திறந்து அரசாங்கம் சுரண்டியெடுத்துள்ளது

   


 வீடுகளில் தாய்மார்கள் பால்மா, உணவுப் பொருட்களுக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை, மதுபான விற்பனை நிலையங்களை திறந்து அரசாங்கம்  சுரண்டி எடுத்துள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல், துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 5 கட்டளைகள், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான  6 கட்டளைகள்,வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான 03 ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு)சட்டத்தின் கீழான ஒழுங்கிவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறுகையில்,


அரசாங்கத்திற்கு வருமானம் இல்லாத காரணத்தினால் கலால் வரியை பெற்றுக்கொள்வதற்காகவே மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. வீடுகளில் உள்ள தாய்மார் பல்மா, உணவுப் பொருட்களை வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை அரசாங்கம் தமக்கு வருமானத்திற்காக சுரண்டியெடுத்துள்ளது. பால்மா, அரிசிக்கு தட்டுப்பாடுகள் நிலவும் நிலையில் பால் மா விலையை அதிகரித்தனர். இவ்வாறாக மக்களுக்கு பதிலளிப்பது யார்.


கொரோனா வைரஸ் இந்த நாட்டுக்கு வெளிநாட்டில் இருந்தே வந்தது. ஆனால் இந்த அரசாங்கம் வைரஸ் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதுதான பொருளாதார வைரஸ். அந்த பொருளாதார வைரஸானது பொருளாதார கொலையாளிகளினால் உருவாக்கப்பட்டதே. இப்போது நிதி, முதலீட்டு, தேசிய உற்பத்தித்துறை, விவசாயகத்துறை என அனைத்துத் துறைகளின் கருப்பைகளுக்கும் இந்த வைரஸ் ஏற்படுத்தப்பட்டள்ளது. இந்த இடத்தில் இருந்தே நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் உருவாகின்றன.


இந்த வைரஸ் மூலம் பொருளாதாரத்திற்கு சுவாசிக்க முடியாது போயுள்ளது. பொருளாதாரத்தின் அனைத்து உடல்பாகங்களும் செயலிழந்துள்ளன. இவ்வாறான நிலைமையில் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் இந்த அரசாங்கமே ஆகும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே 60,000 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது. நாங்கள் சர்வதேச ரீதியில் பொருளதாரத்தில் வீழ்ச்சியடையும் நிலைக்கு செல்ல நேரிட்டது. சர்வதேசத்தின் நம்பிக்கையை இழந்ததுடன், கடன், டொலர் பிரச்சினைகள் உருவாகின.


இவ்வாறான நிலைமையில் வரையறையின்றி நாணயத் தாள்களை அச்சிட்டனர். இதன்மூலம் இன்னும் நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலை உருவானது. இது இவர்களாகவே உருவாக்கிய பிரச்சினையே ஆகும்.


இங்கு உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையை உருவாக்கிய பொருளாதார கொலையாளிகளில் ஒருவரே நிவாட் கப்ரால். இன்று அவர் பொருளாதார பிரச்சனையை உருவாக்கி சர்வதேசத்தின் நம்பிக்கையை இல்லாமல் செய்துள்ளார். இவ்வாறாக செய்த ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்துள்ளனர். அவர் இதற்கு முன்னரும் ஆளுநராக இருந்துள்ளார். அவர் அப்போது ஆளுநராக இருந்த போது நிறுவனமொன்றுக்கு அதிகாரத்தை வழங்கி மின்சார சபையின் நிதி, மத்திய வங்கி ஊழியர்களின் ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை பெற்று 1200 கோடி ரூபா மோசடி நடைபெற்றுள்ளது. அதற்கு யார் பொறுப்பு கூறியது. அத்துடன் கிரேக்க பிணை முறி, ஈபிஎப் உள்ளிட்டவற்றுக்கு நஷ்டம் ஏற்படுத்தப்பட்டது.


இவ்வாறான ஒருவரை அந்தப் பதவிக்கு மீண்டும் நியமிக்கின்றனர். நிவாட் கப்ரால் மத்திய வங்கிக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளமையானது கறையான்களுக்கு அலுமாரியை வழங்கியது போன்றதே என்றார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |