கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு ஆகிய கிராமங்களில் 32 பேருக்கு எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 08 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.இன்று நற்பிட்டிமுனை மைதான வீதியில் 16 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 6 பேருக்கும், பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் 16 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது.கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஆர்.கணேஸ்வரன் தலைமையிலான பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் பிரதேசத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு செயற்பாட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
கல்முனை பிரதேசத்தில் கொழும்பு போன்ற தூர இடங்களில் இருந்து வருகை தந்துள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்கள் சுகாதாரப்பிரிவனருடன் தொடர்பு கொண்டு தங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா எனப்பரிசோதனைகளைச் செய்து கொள்ளுமாறும், வீடுகளில் சுயதனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் அநாவசியமாக வெளியில் நடமாடாது இருக்குமாறும் பொதுமக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
0 comments: