நாட்டில் கொவிட் தொற்று பரவல் தீவிர நிலைமையை அடைந்துள்ளது. எனவே அபாயத்தை கருத்திற் கொண்டு நாளை வெள்ளிக்கிழமை அரசாங்கம் நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், திங்கட்கிழமை முதல் சகல அரச, தனியார் துறைகளையும் இணைத்து நாம் அதற்கான நடவடிக்கையை எடுப்போம் என சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
எமது கடமைகளை இடைநடுவில் கைவிட்டு புதிய சுகாதார அமைச்சர் கூறியதைப் போன்று கடவுளிடம் ஒப்படைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆனாலும் இதனை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு பார்த்துக் கொண்டிருக்க நாம் தயாராக இல்லை என்றும் விசேட வைத்திய நிபுணர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
நாட்டை உடனடியாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது சுகாதார சேவை பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. எவ்வாறிருப்பினும் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக நாம் தொடர்ச்சியாக எமது கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். இவற்றுக்கும் அப்பால் செய்ய வேண்டிய பல செயற்பாடுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments