Home » » குளச்சுத்திகரிப்புப் பணியில் சீனர்கள்- தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

குளச்சுத்திகரிப்புப் பணியில் சீனர்கள்- தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!


 சீனாவின் புரட்சிப்படையின் சீருடை சார்ந்த உடையுடன் தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை பிரதேசத்தில் குளச்சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட சீனர்களால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திலும் இன்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இலங்கையின் அம்பாந்தோட்டை - திஸ்ஸமஹராம பிரதேசத்திலுள்ள பாரிய குளமொன்றை சுத்திகரிக்கும் பணி நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த சுத்திகரிப்பு பணியை ஒருவகை வித்தியாசமான சீருடையை அணிந்திருந்த சீனப் பிரஜைகள் முன்னெடுத்திருப்பதே தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு வித்தியாசமான சீருடையை அணிந்திருந்தவர்களின் உடையானது, சீனாவின் புரட்சிப்படையின் சீருடைக்கு ஒப்பானதாக உள்ளதென கூறப்படுகின்றது. இந்த விவகாரம் பற்றி நேற்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பிலும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வினவப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், சீனாவுக்கு குளச்சுத்திகரிப்பு பற்றிய வேலைத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்துப் பார்ப்பதாகக் கூறியிருந்தார். எனினும் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா நாடாளுமன்ற அமர்விலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான துஷார இந்துனில் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு பற்றி குரல்கொடுத்த மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பலரும் இதுவிடயத்தில் மௌனம் காப்பது ஏன் என்றும் அவர் வினவினார். இருந்த போதிலும் இதுகுறித்து ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் எந்தவொரு அரசதரப்பு உறுப்பினர்களும் உரிய பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |