Home » » யாப்பிற்கமைய ஆசிரியர் சேவைக்குள் பயிலுநர் பட்டதாரிகளை உள்வாங்குக -ஜோசப் ஸ்டாலின்

யாப்பிற்கமைய ஆசிரியர் சேவைக்குள் பயிலுநர் பட்டதாரிகளை உள்வாங்குக -ஜோசப் ஸ்டாலின்

 தற்போது பயிலுநர் பட்டதாரிகளாக பயிற்சி பெறும் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக சேவையாற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் நடவடிக்கையானது ஆசிரியர் சேவை யாப்புக்கு எதிரானது,

என்று இலங்கை


ஆசிரியர் சங்கத்தின் பொ்துச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவது குறித்து நாம் எதிர்ப்பை வௌியிடவில்லை. ஆனால் விதிமுறைகளுக்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அவர்களை மாகாண மட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆசிரியர் சேவை யாப்பு விதிகளுக்கமைய போட்டிப்பரீட்சை நடத்தி அவர்களை இணைத்துக்கொண்டிருக்கலாம். தற்போது அவ்வாறு போட்டிப்பரீட்சை நடத்தாமல் சேவைக்குள் உள்வாங்கப்படவுள்ளனர்.

அடுத்தது அவர்களுக்கு ஒரு வருடம் கடந்த பின்னர் தான் போட்டிப்பரீட்சை நடத்தப்படுகிறது. அவர்களுக்கு 20,000 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. அதுபோல்தான் ஆசிரியர் உதவியாளர்களும் 10,000 ரூபா கொடுத்து சேவையில் வைத்துக்கொண்டிருந்தனர். இவர்களுக்கு நடத்தப்படும் போட்டிப்பரீட்சையில் சித்தியடையவில்லையென்று வைத்துக்கொள்வோம். அவர்களை மீண்டும் வீட்டுக்கு அனுப்புவார்களா?

ஆசிரியர் சேவை என்பது தொழில் இல்லாதவர்களுக்கு வேலைக்கொடுக்கும் இடமில்லை என்பதை நாம் தௌிவாக கூறிக்கொள்கிறோம். கடந்த வருடங்களில் இருந்து இதுதான் நடைபெற்று வருகிறது. எழுமாற்றாக 58,000 பேரை சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றால் அவர்கள் ஒழுங்கான செயற்றிட்டமொன்றை முன்னெடுக்கவில்லை என்றுதானே பொருள். அவர்களை எழுமாற்றாக பொதுச் சேவையில் இணைப்பதல்ல செய்யவேண்டியது. ஒழுங்கான செயற்றிட்டமொன்றை முன்னெடுப்பதே ஆகும்.

இன்னொருபுறம் ஒரு சில இடங்களில் 20 பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார். சில பிரதேசங்களில் 1000 பேருக்கு ஒரு ஆசிரியர் உள்ள பிரதேசங்களும் உள்ளன. கஷ்டப்பிரதேசங்களை எடுத்துக்கொண்டால் நகர பிரதேசங்களில் தேவைக்கு அதிகமான ஆசிரியர்களும் கஷ்டப் பிரதேசங்களில் ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவுகிறது. அதாவது ஆசிரியர் சேவை விதிமுறைகளுக்கமைய செய்யவில்லை என்பதுதானே இதனூடாக தெரிகிறது.

 

இந்நிலையில் தற்போது நியமனங்கள் அவரவர் வதிவிட பிரதேசங்களிலேயே வழங்கப்படவுள்ளன. இதனால் இன்னுமின்னும் பிரச்சினைகள் அதிகரிக்கும். விதிமுறைகளின்று முன்னெடுக்கப்படுவதால் இது நியமனங்கள் வழங்குவதற்காக போராடும் வெற்றிடங்களாக இவை மாறப்போகின்றன. இதை விடவும் நேரடியாக போட்டிப்பரீட்சையொன்றை வைத்து விருப்பமென்றால் அபிவிருத்தியோகத்தர்களை அப்பரீட்சைக்கு தோற்றுமாறு கூறியிருக்கலாம். விதிமுறைக்கமைய செயற்பற்றிருக்கலாம். அதுதானே முறை. அவ்வாறின்றி அனைவரையும் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவது என்பது முறையல்ல

நியமனம் வழங்குவது குறித்து எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அது முறையாக நடைபெற வேண்டும். குறைந்த சம்பளத்தில் ஊழியர்கள் சுரண்டப்படுவதே இதனூடாக நடைபெறும். காலப்போக்கில் இதனால் அவர்கள் விரக்திக்குள்ளாவார்கள். விரக்திக்குள்ளானால் அவர்களுடைய தொழில்நடவடிக்கையில் அது தாக்கம் செலுத்தும். எனவே ஆசிரியர் சேவை யாப்பின் விதிமுறைகளுக்கமைய ஆட்சேர்ப்பு செய்வதே உசிதமானது.

பயிலுனர் பட்டதாரிகள் 18,000 பேரை ஆசிரியர் சேவையில் இணைக்க அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |