Home » » பேரழிவை யாராலும் தடுக்க முடியாது! ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை

பேரழிவை யாராலும் தடுக்க முடியாது! ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை

 


கொரோனா தடுப்பூசிகள் மூலம் மேற்குலக நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளன. ஆனால் இலங்கையால் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடியாமைக்கு அரசின் இராஜதந்திர கொள்கையின் பலவீனமே காரணமாகியுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது எனவும், இந்தியா,அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளை எதிர்த்து சீனாவின் பக்கம் இலங்கை நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை இந்த நாடுகள் இலங்கைக்கு வழங்க முன்வருவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முதலில் தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா பின்னர் வழங்க மறுத்துவிட்டது. கொழும்புத்துறைமுக கடல் பகுதியில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்தபோது இலங்கை இந்தியாவின் உதவியைக்கேட்டது. ஆனால் இந்தியா முழு மனதுடன் உதவவில்லை.

இந்தியா நினைத்திருந்தால் அந்தக் கப்பல் தீயைக்கட்டுப்படுத்தியிருக்க முடியும். இலங்கையின் வெளி உறவுக் கொள்கையின் தவறே இந்தியா இவ்வாறு வேண்டா வெறுப்பாக செயற்படக்காரணம். அத்தோடு, இலங்கையில் அரசினால் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையால் அடைந்த நன்மை என்ன? கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்ததா? கொரோனா உயிரிழப்புக்களை குறைக்க முடிந்ததா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

பயணத் தடைக்கு மத்தியிலும் 60 வீத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பணம் படைத்தவர்கள், அரசியல் செல்வாக்குள்ளவர்கள் சுதந்திரமாக செயற்படுகின்றனர். இந்தப் பயணத் தடையால் வறிய மக்களை பாதாளத்துக்குள் பிடித்து தள்ள மட்டுமே அரசினால் முடிந்தது.

சுகாதாரத்துறையினர் செய்யவேண்டிய வேலைகளை இராணுவத்தினர் செய்வதனாலேயே நாடு தற்போது பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது எனவு்ம தெரவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |