Home » » ஆயிரம் பாடசாலைகள்' திட்டத்தால் சிறிய பாடசாலைகள் மூடப்படும் ஆபத்து

ஆயிரம் பாடசாலைகள்' திட்டத்தால் சிறிய பாடசாலைகள் மூடப்படும் ஆபத்து

 


தொற்றுநோய் பரவல் காரணமாக, பாடசாலை கல்வி முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், 1,000 பாடசாலைகளை மாத்திரம் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டம் ஏனைய பாடசாலைகளுக்கு இயற்கை மரணத்தை ஏற்படுத்தும் என நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கையில் பாடசாலை கல்வி கொடிய தொற்றுநோயால் முற்றிலுமாக முடங்கியுள்ளதோடு, கல்வி பல கடுமையான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது.

அவற்றில் பாடசாலைகள் மீண்டும் திறத்தல், சுமார் 60 சதவீத பாடசாலைகளின் மாணவர்களுக்கு மாற்று கல்வி முறை இல்லாமை, தேசிய பரீட்சைகளை நடத்த இயலாமை, 2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சையை நடத்த இயலாமை மற்றும் இந்த தாமத்தினால் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு அவசரமாக தீர்வுகாணப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில், 1,000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் செயற்பாட்டிற்கே அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொரொனா தொற்றுநோய் பரவியதால் காலவரையின்றி பாடசாலைகள் மூடப்பட்டுள்ள போதிலும், ஜூன் 10 நாளைய தினம், 1,000 தேசிய பாடசாலைகளை திறக்க அரசாங்கம் பாரிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 30 பேர் பங்கேற்கவுள்ள ஆரம்ப விழாவை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் குறிப்பிட்டுள்ளார்.

புனரமைக்கப்படும் தேசிய பாடசாலை ஒன்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்படும் என கூறப்பட்டாலும், இதுவரை எந்தப் பாடசாலையும் இந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளவில்லை எனவும், மேலும் மூன்று இலட்ச ரூபாய் செலவில் பாடசாலையின் பெயர் பலகை தயாரிக்கப்பட்டு வண்ணம் தீட்டப்படுவதாக ஆசிரியர் சங்கத் தலைவர் சுட்டிக்காட்டுகிறார்.

எந்தவொரு விஞ்ஞான அடிப்படையுமின்றி இந்த பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் 750ற்கும் மேற்பட்ட மாகாண பாடசாலைகள் இந்த நோக்கத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சில பாடசாலைகள் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவைக்கு அமைய தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"மேலும், அண்மையில் பாடசாலைகளைத் திறப்பது தொடர்பாக சூம் தொழில்நுட்பத்துடன் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையின் கீழ் கல்வி அதிகாரிகள் உதவியற்றவர்களாக இருந்தனர். இது கல்வி முறையை மேலும் அரசியலாக்குவதாகும்.

" நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள பிரபலமான பாடசாலைகளின் பெரும்பாலானவை இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், அரசாங்கம் உண்மையில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய விரும்பினால், மாகாண சபைகளால் உருவாக்கப்பட்ட பிரபலமான பாடசாலைகளை மாத்திரம் தெரிவு செய்யக்கூடாது எனவும், பிற பிரபலமடையாத மற்றும் சிறிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

”மாகாண சபைகள் செயற்படாத மற்றும் மக்கள் பிரதிநிதிகள் செயற்பாட்டில் இல்லாத நிலையில், மாகாண சபைகளிடமிருந்து எந்தவொரு விசாரணையும் இன்றி மாகாண சபைகளால் உருவாக்கப்பட்ட இந்த பாடசாலைகளை கல்வி அமைச்சு கையகப்படுத்துவது, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளில் உள்ள அதிகாரங்களை கையகப்படுத்துவதாகும்.

இது அரசியலமைப்பிற்கு முரணானது” அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் பின் இணைப்பு 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள பொதுப் பட்டியலில், பாடசாலைகள் குறித்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய இராணுவ உறுப்பினர்களின் பிள்ளைகளுக்காக ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பாடசாலைகள் மாத்திரமே கல்வி அமைச்சுக்கு உரித்தானது எனவும் ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பாடசாலைகள் அல்லாத பாடசாலைகள் மாகாண சபைகளுக்கு சொந்தமானவை எனவும், கல்வி அமைச்வு விவகாரங்களை மேற்பார்வையிடவும் நிர்வகிக்கவும் மாத்திரமே முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த விதிகளுக்கு அமைய, ஒரு குறிப்பிட்ட அபிவிருத்தி திட்டத்திற்காக வரி அமைச்சு பாடசாலைகளை தெரிவு செய்ய முடியுமெனவும், எவ்வாறெனினும் அவை மாகாண சபைகளின் வசமே காணப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் பணியில், தற்போது பாடசாலை கட்டமைப்பில் உள்ள மொத்தமான 4.3 மில்லியன் மாணவர்களில் சுமார் 60% பேர் கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டில் காணப்படுவதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள 373 தேசிய பாடசாலைகளில் 172 ற்கு அதிபர்களை நியமிக்க முடியாத கல்வி அமைச்சிற்கு, இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மாணவர்களை நிர்வகிப்பதற்கான வழிமுறை காணப்படுகிறதா என்பது கேள்விக்குரியே என ஜோசப் ஸ்டார்லின் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், மாகாண பொது சேவையின் கீழ் செயற்பட்டு வரும் இந்த பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் நிர்வாகத்திற்கு இதுவரை எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. துரதிர்ஷ்டவசமான நிலைமை என்னவென்றால், 1,000 பாடசாலைகளை மாத்திரமே அபிவிருத்தி செய்வது ஏனைய சிறிய பாடசாலைகளை மூடுவதற்கு வழிவகுக்கும். மொத்தம் 10,174 பாடசாலைகளில் 1,000 பாடசாலைகளை மாத்திரமே அபிவிருத்தி செய்வதோடு, ஏனைய பாடசாலைகளை புறக்கணிப்பதானது கடுமையான சிக்கலை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 6%ஐ கல்விக்காக ஒதுக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகின்ற போதிலும் அரசாங்கம் அவசரமான செயற்பாடு, 10,174 பாடசாலைகளில் பாதிக்கு மேற்பட்ட பாடசாலைகளின் இயற்கையான அழிவுக்கு உள்ளாக்குமா என இலங்கை ஆசிரியர் சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், இலவச கல்வி வாய்ப்புகள் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுமெனவும், 1,000 தேசிய பாடசாலைகள் திட்டம் இணை கல்வி வாய்ப்புகளை இல்லாது செய்வதோடு கல்விக்கான அடிப்படை உரிமையை கூட இழக்கச் செய்து , இருண்ட சூழலை ஏற்படுத்தியுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |