Home » » மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் உள்நுழைவோருக்கு உள் நுழையும் பிரதேசங்களிலேயே அன்ரிஜன் பரிசோதனை- அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் உள்நுழைவோருக்கு உள் நுழையும் பிரதேசங்களிலேயே அன்ரிஜன் பரிசோதனை- அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவிப்பு!!


 மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் பிரவேசிப்போருக்கு மாவட்டத்தின் உள் நுழையும் பிரதேசங்களிலேயே அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று 11.05.2021 ஆந் திகதி (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், மாகாண மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும் இக் காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனவும் அதற்காக அரச நிறுவனங்களின் முன்னேற்பாடுகள் தெடர்பாகவும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கூட்டத்தின் நிறைவில் செயலணியில் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் மாவட்ட அரசாங்க அதிபரும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்,

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் ஈடுபடும் போது அனாவசிய தேவைகளுக்காக பயணிப்பார்களேயானால் அவர்களை இனம்கண்டு மீண்டும் அவர்கள் திருப்பியனுப்பப்படுவார்கள் என்றும், ரமழான் கொண்டாட்டத்திற்காக ஏனைய மாவட்டங்களில் இருந்து நாளை மற்றும் நாளை மறுதினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு மாவட்டத்தின் உள் நுழையும் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் எழுமாறாக அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

அதேவேளை மாவட்டத்தின் கொவிட் நிலவரம் நாளுக்கு நாள் வித்தியாசப்படுவதாகவும் சில வேளையில் சடுதியாக அதிகரிப்பதுடன், சில நாட்களில் சமனாக இருக்கின்றது, இதன் அடிப்படையில் ஆளுணர் அவர்களின் தீர்மானத்திற்கு அமைவாக இரவு 9 மணி வரை மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் மாலை 6 மணியுடன் மூடப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதே வேளை மாவட்டத்தில் இன்னும் மேலதிகமாக கொவிட் நோயாளர்களை பராமரிப்பதற்கான இடவசதியினை மேற்கொள்ளும் பொருட்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் விவசாய பீட மாணவர்கள் தங்கியிருந்து கல்வி பயில்கின்ற விடுதி வசதியை இதற்காக பெறுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், அதனை ஆராய்வதற்காக இன்று ஒரு குழு நியமிக்கப்பட்டு அவர்கள் அதை நேரில் சென்று பார்வையிட்டு அதின் சாதக பாதக தன்மை தொடர்பில் ஒரு அறிக்கையினை சமர்ப்பிப்பார்கலெனவும், அதன் பின்னரே அந்த விடுதியை பாரமெடுப்பதா என்பது தொடர்பான தீர்மானம் எட்டப்படுமெனவும் தெரிவித்தார்.

இதைவிட ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது. மாவட்டத்திற்குள் ஏனைய மாவட்டங்களில் இருந்து உள் நுழைவதாயின் ஏழு வழிகள் காணப்படுகின்றன, அந்த 7 இடங்களிலும் உடனடியாக பொலிசாரையும் இராணுவத்தினரையும் பயன்படுத்தி சோதனைச் சாவடிகளை ஏற்படுத்தப்படவுள்ளதாகவும், இதில் மாவட்டத்திற்குள் உள் நுழைபவர்களையும் வெளிச்செல் பவர்களையும் சோதனையிடவுள்ளதுடன் பொருளாதார மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்களை மாத்திரமே போக்குவரத்து மேற்கொள்வதற்கு அனுமதிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

பொதுமக்கள் அநாவசியமாக மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மிக முக்கியமான தேவைகளுக்காக மாத்திரம் மாவட்டத்தைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

அதே போன்று மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்காக சில உபகரண தேவைப்பாடுகள் நிலவி வருகின்றமையினால் அவற்றின் சிலவற்றை தாம் பெற்றுத்தருவதாக கூறி சில தனிநபர்களும் பொது நலன்விரும்பிகள் மற்றும் ஏனைய ஸ்தாபனங்களைச் சேர்ந்தோர் தாமாகவே முன்வந்திருந்ததாகவும், அது தொடர்பாக இதன்போது ஆராய்ந்தபோது நேரடியாக பண கொடுக்கல் வாங்கவில் ஈடுபடாமல் உபகரணங்களை வாங்கி வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவத் தரப்பு பிரதானி 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்த, 231 வது படைப்பிரிவின் விறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.க.கலாரஞ்சினி, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பீ.கே.ஹெட்டியாராச்சி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, கிழக்கு பல்கலைக் கழகத்தின்
டீ.கே.பிரேமகுமார் (டீன்), கிழக்கு பல்கலைக் கழகத்தின் பதிவாளர் ஏ.பகீரதன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் பி.தேவகாந்தன், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி முகாமையாளர் எம்.கிறிஸ்ணராஜா, கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் கலாநிதி உ.யுவநாதன், வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எம். செல்வராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |