Home » » மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் இலவச சேவை!

மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் இலவச சேவை!

 


கொவிட்-19 தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக - தற்போது பாடசாலைகள் இயங்குவது நிறுத்தப்பட்டிருப்பதுடன், நாடளாவிய நடமாடக் கட்டுப்பாடும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இத்தகைய சூழலில் - இணைய வழி மூலமாகவே மாணவர்கள் தமது பாடசாலை கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்.

அதேவேளையில் இணைய வழியில்‌ பாடசாலைக் கல்வியைக் கற்பதற்‌கான தகவல்‌ தொடர்பு மற்றும் சாதன வசதிகள் குறைவான மாணவர்கள்‌ - சாதாரண தொலைபேசி அழைப்பினை கட்டணமின்றி மேற்கொள்வதன் மூலம் பாடசாலைக் கல்வியைக் கற்பதற்கான ஒழுங்குகளைக் கல்வி அமைச்சு செய்துள்ளது.

அதன்படி கைத்தொலைபேசி அல்லது நிலையான இணைப்பு தொலைபேசி ஒன்றிலிருந்து‌ 1377 என்ற இலக்கத்தை அழைத்து மாணவர்களுக்கான தொடர்பு மொழியைத் தெரிவு செய்வதன் ஊடாக இந்த சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

திங்கள்‌ தொடக்கம்‌ வெள்ளிக்கிழமை வரை காலை 9.00 மணி முதல்‌ பிற்பகல் 12.00 மணிவரை மாணவர்‌கள்‌ தமக்குத்‌ தேவையான பாடங்களின் விளக்கங்களையும்‌ ஐயங்களையும்‌ இந்த சேவை ஊடாகக் கேட்டறிய முடியும்‌.

இந்தச் சேவைக்காகத் தொலைபேசிக்‌ கட்டணம்‌ எதுவும்‌ அறவிடப்படமாட்டாது.

தற்போதைய இணைய வழி கற்றல்‌ நடவடிக்கைகள்‌ 50 வீதமான மாணவர்களைச்‌ சென்றடையவில்லை என்ற தகவல்கள் அரசாங்கத்தால்‌ கண்டறியப்பட்டதன் அடிப்படையிலேயே சாதாரண தொலைபேசி ஊடாகக்‌ கற்‌கின்ற இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், வீட்டிலிருந்தபடியே தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக இந்த சேவை மூலமாக பிரத்தியேக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடம் தொடர்பிலும் தமக்கு எழுகின்ற ஐயங்கள இந்த சேவை ஊடக மாணவர்கள் தீர்த்துக்கொள்ள முடியும்.

தற்போதைய காலத்தின் தேவையை கருத்தில் எடுத்து, எமது அரசாங்கத்தினால், குறிப்பாக கல்வி அமைச்சினால் செய்யப்பட்ட பரிந்துரைக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கும் அமைய டயலொக் அக்‌ஷியாடா நிறுவனத்தின் பிரதான பங்களிப்புடன், தபால் மற்றும் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழ் மொபிடெல், எயார்டெல், ஹட்ச், ஶ்ரீ லங்கா ரெலிகொம், லங்கா பெல் ஆகிய தொலைபேசி சேவை வழங்குனர்கள் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

பெற்றோர்கள், மேற்படி எந்தவொரு தொலைபேசி சேவை வழங்குனரின் வலையமைப்பின் ஊடாகவும் 1377 எனும் இலக்கத்தை அழைப்பதன் மூலம் தமது பிள்ளைகளுக்கு இந்த கற்றல் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் இந்த சேவையை மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு பாடம் தொடர்பிலும், அனுபவம் வாய்ந்த, நிபுனத்துவம் மிக்க ஆசிரியர்கள் இதற்காக மாணவர்களுடன் தொடர்புபடுத்தப்படுவார்கள்.

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் - கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தாய்மொழிகளான தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய பாடங்கள் தொடர்பான எந்தவொரு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இந்த சேவை மூலமாக விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |