Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வடக்கு, கிழக்கில் விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் - அமைச்சரவை அங்கீகாரம்


 மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்கும் வேலைத்திட்டத்தை வடக்கு கிழக்கில் விரிவுபடுத்தும் நோக்கில் பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தில் இந்த விசேட வர்த்தக நிலையங்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சதொச கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக அத்தியாவசிய பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கு தற்பொழுது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதனால் நாடு தழுவிய ரீதியில் இந்த வலைப்பின்னலை விரிவுபடுத்துவதற்காக தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

15 பொருளாதார மத்திய நிலையங்கள் நாடளாவிய ரீதியில் இயங்கி வருகின்றது.

அதற்கமைய மட்டக்களப்பு மற்றும் வவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதுடன், யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் முதலாம் கட்ட கட்டுமானப்பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன.

குறித்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ நிதியத்தை நிறுவுவதற்கும் முறையான பொறிமுறையை பின்பற்றி குறித்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வியாபார அலகுகளை ஒதுக்கி வழங்குவதற்கும் கமத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments