Home » » விரைவில் ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல்?

விரைவில் ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல்?

 


ஸ்ரீலங்காவில் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யுமாறு அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, விரைவில் ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

தென்னிலங்கையில் செயற்பட்டு வருகின்ற கடும்போக்குவாத பௌத்த அமைப்புக்களில் ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனா அமைப்பு முன்னிலை வகித்து வருகின்றது. முஸ்லிம் மக்களுக்கு விரோதமான அமைப்பாகவே இது கருதப்படுகின்றது.

குறிப்பாக, இனவாத செயற்பாடுகள், பேச்சுக்கள், மஹரகம மற்றும் அழுத்கம பகுதிகளில் ஏற்படுத்திய கலவர நிலைமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஞானசார தேரருக்கு எதிராக காணப்படுகின்றன. மேலும் ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், பொதுபல சேனா அமைப்பு இனவாத செயற்பாட்டிற்கு ஊக்கமளித்து வருவதால் அதனை தடை செய்ய வேண்டும் என்கின்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமை பற்றிய சர்வதேச பிரகடனத்திற்கமைவாக, ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கான பரிந்துரையை ஏற்கனவே ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்திருந்தது. இதன் காரணமாக தென்னிலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதோடு, எந்த வகையிலும் அந்த அமைப்பின் மீது தடையை அரசாங்கம் பிரயோகிக்காது என்பதை அரச தரப்பு அமைச்சர்களும் பொது மேடைகளில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒப்படைத்த அறிக்கையை மீளாய்வு செய்து பரிந்துரைப்பதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட துணை அமைச்சரவைக் குழுவே வழக்கு தாக்கல் செய்வதற்கான இந்தப் பரிந்துரையை முன்வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.   


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |