Home » » Ak47 துப்பாக்கிகளுடன் கைதான இலங்கை மீனவர்கள் - இரண்டு நாடுகள் பின்புலத்தில்? வெளிவரும் பகீர் தகவல்

Ak47 துப்பாக்கிகளுடன் கைதான இலங்கை மீனவர்கள் - இரண்டு நாடுகள் பின்புலத்தில்? வெளிவரும் பகீர் தகவல்

 


கேரளாவின் விழிஞ்சம் கடற்பகுதியில் 300 கிலோவுக்கும் மேற்பட்ட ஹெரோயின் மற்றும் ஏ.கே 47 துப்பாக்கிகளுடன் 6 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் பல பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இந்த சம்பவத்துடன் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

உளவுத் தகவல் அடிப்படையில் கேரளாவின் விழிஞ்சம் கடற்கரைக்கு அப்பால்,‘ரவிஹன்சி’ என்ற பெயரில் சென்ற இலங்கை படகை இந்திய கடலோரக் காவல் படை மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் மார்ச் 25ம் திகதியன்று இடைமறித்து விழிஞ்சம் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.

அதில் சோதனையிட்டபோது, 300.323 கிலோ ஹெரோயின், 5 ஏ.கே.-47 துப்பாக்கிகள், 1000 9 எம்.எம் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. படகின் தண்ணீர் தொட்டிக்குள், 301 பைக்கட்டுகளில் ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதில் பறக்கும் குதிரை சின்னம் இருந்தது. இவற்றோடு போலி ஆவணங்கள் பலவும் கைப்பற்றப்பட்டன.

இந்த ஆயுதங்களும்,ஹெரோயினும் ஈரானின் சாபகர் துறைமுகத்திலிருந்து கொண்டு வரப்பட்டு இலங்கை படகிடம் ஒப்படைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்திய கடல் பகுதி வழியாக ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்திச் சென்ற இலங்கையைச் சேர்ந்த நந்தன, தேசப்பிரிய, குணசேகர, சேனாரத்ன, ரணசிங்க, நிசாங்க ஆகிய ஆறு பேரை போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் இம்மாதம் 27ம் திகதி கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைத்தனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு, இதில் தொடர்பிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அரபிக் கடல் பகுதியில் அதிகளவிலான ஹெரோயின் போதைப் பொருட்களை இந்திய அதிகாரிகளும், இதர அமுலாக்கப் பிரிவினரும் பறிமுதல் செய்து வருகின்றனர். அதனால் இந்த கடத்தல் கும்பலுக்கும், அவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் எனத் தெரிகிறது.

இவற்றை பறிமுதல் செய்த சென்னை போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு பணிப்பாளர் அமித் கவாத்தே, கண்காணிப்பாளர்கள் எம். சுரேஷ் குமார், ஆசிஸ் குமார் ஓஜா, உளவுத்துறை அதிகாரிகள் சைஜூ வர்கீஸ், மேத்யூ வர்கீஸ், சாம்சன், பிரமிளா, சண்முகம் மற்றும் இதர அதிகாரிகளின் அர்ப்பணிப்பான முயற்சிகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பாராட்டியுள்ளது.

இந்தத் தகவல், சென்னை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மண்டல இயக்குநர் அமித் கவாத்தே வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |