பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பும்போது இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் அதிகரிக்கும் என மட்டக்கயப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.
புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;
கடந்த ஒரு வருட காலமாக முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட விடயத்தில் கவலைகள் ஏற்பட்டது.
அதேவேளை புரளிகளும் கிளப்பப்பட்டன. அந்தப் புரளிகளுக்கு கடந்த 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக அனுமதி வழங்கிய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்த விடயத்தில் உதவி புரிந்த முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ, அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார உட்பட பலருக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
கடந்த ஒக்டோபெர் 22ஆம் திகதி நாங்கள் இந்த அரசுக்கு ஆதரவு அளித்ததன் காரணமாக எமது நற்பெயரை களங்கப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த சபையில் இருக்கின்றார்கள். அவர்கள் எங்களை மிகவும் கேவலமாக சித்தரித்தார்கள். நாம் ஆதரவளித்ததனாலேயே ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதாகவும் பழி சுமத்தினார்கள். பல்வேறு பொய்யான பிரச்சாரங்களை கட்டவிழ்த்தும் விட்டார்கள்.
கடந்த 05 நாட்களுக்கு முன்னர் கூட ஜனாஸா எரிப்பு விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள் தொடர்பில் ஒரு பிழையான தகவலை கூறினார். இதுவரை கொரோனா வைரஸினால் மரணித்து எரிக்கப்பட்ட 497 சடலங்களில் 334 முஸ்லிம்களினுடைய ஜனாஸாக்கள் என்று கூறினார்.
நிச்சயமாக அவ்வாறில்லை. எரிக்கப்பட்ட உடல்களில் 181 ஜனாஸாக்களே முஸ்லிம்களுடையது. இது ஒரு கவலையான விடயம். இவ்வாறு நடந்திருக்கக் கூடாது. இவ்வாறான விடயங்கள் இனிமேலும் நடக்கக் கூடாதென நாம் பிரார்த்திக்கின்றோம். அதேவேளை பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பும் போது இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் அதிகரிக்கும் என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டிலே இவ்வாறான முரண்பாடுகள் இனிமேலும் உருவாகக் கூடாது.
சிறிய சிறிய பிரச்சினைகளே பெரிய பிரச்சினைகளாகி இனங்கள், துருவயமயப்படுத்தப்பட்டு, கலவரங்கள் வெடிக்கின்றன. நாட்டிலே இனங்கள் தனித்தனியாக பிரிந்து சின்னாபின்னாமாகும் நிலை உருவாகின்றது.
இந்த மாதம் 05ஆம் திகதி அசனத்தும்மா என்பவரின் ஜனாஸாவை எடுத்துக் கொண்டு குருநாகல் சென்று அங்கு குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த எனது நண்பனான கலீலின் ஜனாஸாவையும் எடுத்துக் கொண்டு ஓட்டமாவடிக்கு அடக்கம் செய்வதற்காக சென்றோம்.
ஜனாஸாவை கொண்டு செல்வதிலும் அதனைத் தொடர்ந்த பணிகளிலும் இராணுவத்தின் பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் என்னால் இந்த இடத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது.
அந்த ஜனாஸாக்களை கண்ணியமாகவும், பக்குவமாகவும் கையாள்வதில் இராணுவத்தினர்; நடந்து கொண்ட விதத்தை நான் நன்றியுடன் நினைவூட்டு;கின்றேன்.
கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலையிலிருந்து அதிகாலை 05.48 க்கு ஜனாஸாவை எடுத்துக் கொண்டு வெளியேறிய நாங்கள் குருநாகல் சென்று அங்கிருந்து 10.14க்கு அடுத்த ஜனாஸாவையும் எடுத்துக் கொண்டு ஓட்டமாவடி சூடுபத்தினசேனைக்கு சென்றோம்.
அதுவரை எங்களுடன் பயணித்த கெப்டன் செனிவிரத்ன எதுவுமே சாப்பிடாமல் இருந்ததை நான் அவதானித்தே சென்றேன்.
கெப்டன் செனிவிரத்ன, பிரிகேடியர் பிரதீப், மேஜர் ஜெனரல் கொஸ்வத்த போன்றவர்கள் இந்த ஜனாஸாக்களை அடக்குவதில் காட்டிய அக்கறையையும் அவர்களின் அர்ப்பணிப்பையும் நன்றியுணர்வுடன் மெச்சுகின்றேன்.
அதுமாத்திரமன்றி ஓட்டமாவடி பிரதேச சபையினர், சுகாதார அதிகாரிகள், ஓட்டமாவடி உலமா சபை மற்றும் வாழைச்சேனை, ஓட்டமாவடி பொதுமக்கள் ஆகியோரும் ஜனாஸா அடக்கும் விடயத்தில் தமது பங்களிப்பை நல்கினார்கள்.
ஒரு வருடத்திற்கு பின்னர், கொரோனா வைரஸினால் மரணமடைந்த ஜனாஸாக்கள் முதன் முதலாக சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்படுகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இன்று வரை 39 ஜனாஸாக்கள் அடக்கப்பட்டுள்ளன. இன்னும் அநுராதபுரத்தில் மாத்திரம் ஒரு ஜனாஸா இருக்கின்றது. தவிர சிலர் முகநூலில் கூறுவது போன்று 11 ஜனாசாக்கள் இன்னும் வருகின்றது எனக்கூறுவது தவறானது” என்றார்.
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
0 comments: