Home » » அதிபர் நியமனத்தில் தமிழ், முஸ்லிம்களுக்கு அநீதி; ஆசிரியர் சங்கங்கள் தலையிடாதிருப்பதேன்?

அதிபர் நியமனத்தில் தமிழ், முஸ்லிம்களுக்கு அநீதி; ஆசிரியர் சங்கங்கள் தலையிடாதிருப்பதேன்?

 


(அஸ்லம் எஸ்.மௌலானா)

2019ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பிற்கு முரணாக வழங்கப்பட்ட இலங்கை அதிபர் சேவை தரம்-3 நியமனத்தில் தமிழ் மொழி மூல விண்ணப்பதாரர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் என்பன தலையிட்டு, நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும் என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ஏ.ஏல்.முகம்மட் முக்தார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இலங்கை அதிபர் சேவை பிரமாணக்குறிப்பில் அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்படும்போது தமிழ் மொழி மூலம், சிங்கள மொழி மூலம் என வெவ்வேறாக விண்ணப்பம் கோரப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனினும் கல்வியமைச்சு அதனை கவனத்தில் கொள்ளாது விண்ணப்பம் கோரி நியமனம் வழங்கியமை காரணமாக தமிழ் மொழி மூல விண்ணப்பதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பரீட்சையில் தமிழ் மொழி மூல விண்ணப்பதாரிகள் பலர் கூடிய புள்ளிகள் பெற்று, நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டபோதும் அவர்களுக்கு நியமனம் வழங்கப்படாமல் பாரிய அநீதியிழைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் நீதிமன்ற உதவியை நாடியுள்ளனர்.

எனினும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்படி இரு சங்கங்களும் நட்புக்கரம் நீட்டாமல், மௌனம் காத்து வருகின்றன. இந்த நிலைப்பாட்டுக்கான காரணம் என்ன என்று புரியவில்லை. இந்த விடயத்தில் இச்சங்கங்கள் தலையிட்டு, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குறித்து தமிழ் மொழி மூல விண்ணப்பதாரிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

அவ்வாறாயின் இந்நியமன விடயத்தில் கல்வியமைச்சு நடந்து கொண்ட முறையை இச்சங்கங்கள் சரிகாண்கின்றனவா அல்லது சேவை பிரமாணக்குறிப்பை மீறி கல்வி அமைச்சு சிங்கள மொழி மூல சகோதரர்களுக்கு கூடுதலாக நியமனம் வழங்கியதை சரிகாண்கின்றனவா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகையினால் இனியும் மௌனம் காக்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக தீர்வு கிடைப்பதற்காக குரல் எழுப்புவதுடன் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இச்சங்கங்கள் முன்வர வேண்டும்- என அவர் கேட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |