Home » » நானே கொன்றேன் என்று பகிரங்கமாக கூறிய கோட்டாபய! மிகப் பெரும் சாட்சியாக மாறிய தகவல்

நானே கொன்றேன் என்று பகிரங்கமாக கூறிய கோட்டாபய! மிகப் பெரும் சாட்சியாக மாறிய தகவல்

 


விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய கூறியதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம். அதை வைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவரிடம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ்க்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோருக்கிடையில் இன்று காலை 7.00 மணியளவில் தனியார் விடுதி ஒன்றில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போதே மேற்குறித்த விடயத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸிடம் வலியுறுத்தினார்.

குறித்த கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலும் குறிப்பிடுகையில்,

ஜெனீவாவில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் மற்றும் அந்த தீர்மானத்திற்கு இருக்கின்ற சவால்கள் அந்த சவால்களை எதிர்கொள்வதற்காக ஒருங்கிணைந்த நாடுகள் எவ்வாறான விடயங்களை எதிர்கொள்கின்றன, அந்த சவால்களை அவர்கள் எவ்வாறு சாமாளிக்க போகிறார்கள், அதற்கு தமிழர் தரப்பான எங்களுடைய பங்களிப்பு என்ன? மற்றும் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும் இன்று உள்ள களச் சூழல்களில் தமிழ் மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் மற்றும் இந்த அரசாங்கம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் நடந்து முடிந்த பின்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், பொதுமக்கள் போன்றோரை விசாரணை என்ற போர்வையில் அச்சுறுத்தி வருவது தொடர்பிலும் நாங்கள் அவருடன் கலந்துரையாடியுள்ளோம்.

அத்துடன் அண்மையில் அம்பாறையில் உகுண பிரதேசத்தில் பிரபாகரனை நான் கொன்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய சொன்னதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம் -அதை வைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸிடம் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் உலகத் தமிழர் பேரவை மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய நீதி மையம் நியூயோர்க் பல்கலைக்கழகம் அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் மற்றும் கனேடிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய மெய்நிகர் கலந்துரையாடலில் கலந்து கொண்ட, போர்க்குற்றங்கள் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ராப் - ஸ்ரீலங்காவில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த சந்தரப்பத்தில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான விடயங்களை சாட்சியமாக வைத்து நடவடிக்கை எடுக்க முடியும் என அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸிடம் சுட்டிக்காட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டார்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |