பொத்துவில்-பொலிகண்டி பேரணிக்கு வவுனியா சிவில் அமைப்புக்கள் பேராதரவு வழங்குகின்றோம்
வடக்கு - கிழக்கு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்ட பேரணி கடந்த 3 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு நான்காவது நாளான இன்று வவுனியாவில் இருந்து பேரணி மன்னார் நோக்கி புறப்படுகின்றது.
வடக்கு- கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ் முஸ்லிம் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்தல், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சனை, முஸ்லிம்களின் ஜனசாக்களை தகனம் செய்தல் உள்ளிட்ட அரச அடக்குமுறைகளை கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கேட்டும் இந்த போராட்டம் தொடர்கிறது.
இந்தநிலையில் சர்வதேச சமூகமும், ஐ.நாவும் இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி தமிழ் பேசும் மக்களுக்கு சர்வதேச விசாரணை ஊடாக ஒரு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ்த் தேசிய கட்சிகள், முஸ்லிம் சமூகம் என பல்வேறு தரப்பினரும் கோரி வரும் நிலையில் வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ் பேசும் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஆகிய நாமும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்.
0 comments: