Home » » யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்கும் எண்ணம் இல்லை என்பது கோட்டாபயவின் பேச்சில் தெரிகின்றது!தவராஜா கலையரசன் M.P

யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்கும் எண்ணம் இல்லை என்பது கோட்டாபயவின் பேச்சில் தெரிகின்றது!தவராஜா கலையரசன் M.P

 


யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்கும் எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு இந்த கருத்தினை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் இருக்கும் அரசியல் தலைவர்கள் மக்களை அச்சமூட்டும் வகையில் அரசியல் செய்து வருகின்றனர். குறிப்பாக மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் மோசமான இனவாத அடிப்படையிலான வார்த்தைகளை பேசுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி மோசமான சூழ்நிலையை நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்பதாக அமைகின்றது.

தொடர்ச்சியாக தமிழ் மக்களை அடக்கி ஆள என்ற வகையில் அவர்களது செயற்பாடுகள் இருக்கின்றது. எந்த ஒரு விடையத்தை எடுத்து பார்த்தாலும் அடக்கியாண்டு சுதந்திரம் அற்ற நிலையில் இருக்க வேண்டும் என்பதே அவர்களது செயற்பாடுகளாக இருக்கின்றது. இந் நிலை மாற வேண்டும்.

நாங்கள் இந்த நாட்டில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றோம் . அவர்களது பேச்சில் சிறுபான்மை சமூகம் வாழ முடியாது என்றதொரு நிலை இருக்கின்றது. குறிப்பாக கிழக்கில் இந்த நிலை அதிகரித்துள்ளது.

நாட்டின் ஜனாதிபதி யுத்தத்தை உதாரணம் காட்டி மிக மோசமாக பேசியிருக்கின்றார். யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏனைய மக்களையும் அரவணைத்து நாட்டின் பிரஜை என்ற அடிப்படையில் செயற்பட வேண்டும். இது நாட்டை ஆளுகின்ற தலைவர்களது தலையாய கடமையாகும். மாறாக எம்மை மாற்று பார்வை கொண்டு பார்க்கும் நிலை மாற வேண்டும்.

ஏனைய இனங்களை போன்று தமிழ் மக்களும் வாழ வேண்டும் என்றவகையில் எமது அரசியல் பணி முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |