Home » » இன்று காரைதீவில் மாணவர் இருவருக்கு கொரோனா!

இன்று காரைதீவில் மாணவர் இருவருக்கு கொரோனா!


 ( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவில் இன்று இரு மாணவர்களுக்கு முதற்தடவையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனையடுத்து அவர்களோடு தொடர்பிலிருந்த மூன்று வகுப்புகளில் கற்கும் 105மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:

கல்முனை அஸ்ரப் ஆதாரவைத்தியசாலையில் பணியாற்றும் காரைதீவைச் சேர்ந்த 50 வயதுடைய முகாமைத்துவ உதவியாளர் ஒருவருக்கு கொரோனாத்தொற்று இனங்காணப்பட்டதாக நேற்று (21) வியாழனன்று பகல் எமக்கு அறிவிக்கப்பட்டது. அவரை வைத்தியசாலையிலிருந்தே மட்டக்களப்பிற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அதனையடுத்து நாம் உடனடியாக செயற்பட்டு அவரது வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது தமது 3 பிள்ளைகளும் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் கற்பதாகக் கூறினர்.

அவர்களை வரவழைத்து அன்ரிஜன் சோதனை செய்த போது தரம் 11 மற்றும் தரம் 13 வகுப்புகளைச் சேர்ந்த அவரது மகனும் மகளும் கொரோனாத் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. 4ஆம் வகுப்பைச் சேர்ந்த மூன்றாவது மகளுக்கும் தாய்க்கும் தொற்றில்லை என முடிவு வந்துள்ளது. 

தொற்றுக்கள்ளான பிள்ளைகளை மருதமுனை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த மூன்று மாணவர்களும் பயிலும் 3 வகுப்புகளைச் சேர்ந்த 105 மாணவர்களையும் குடும்பத்தையும் நேற்றிலிருந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளோம். 

அவர்களில் குறித்த 3 மாணவர்களுடன் நெருங்கிப்பழகிய மாணவர்களை எதிர்வரும் திங்களன்று (25) பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.

தேவைப்படின் அந்த வகுப்புகளுக்கான அவசியமெனக் கருதப்படும் ஆசிரியர்களையும் பிசிஆர் செய்ய திட்டமிட்டுள்ளோம். பாடசாலை மூடப்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. கல்முனை பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளருடன் ஆலோசனை செய்தே அத்தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

இதேவேளை இதுவரை கல்முனை  பிராந்தியத்திற்குட்பட்ட காரைதீவு பிரதேசத்தில் இதுவரை 54பேருக்கு தொற்றுறுதி இனங்காணப்பட்டுள்ளது.

இதுவரை காரைதீவில் 1666 பேருக்குபிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்றுமட்டும் 40பேருக்கு பிசிஅர் அன்ரிஜன் செய்யப்பட்டது. இறுதியாக குறித்த 2மாணவரும் மேலுமொருவருமாக 3பேர் இனங்காணப்பட்டிருந்தனர்.

மாளிகைக்காட்டைச்சேர்ந்த 25பேர் தொற்றுக்கிலக்காகி சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் ஓரிருநாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பவுள்ளனர். 

ஏலவே 17பேர் சிகிச்சையை பூர்த்தி செய்து வீடு வந்து விட்டனர்.இன்னும் 36 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

எது எப்படியிருப்பினும் காரைதீவில் ஏற்பட்டுள்ள இத் தொற்றுக்கள் பரம்பலடையவில்லை. மாறாக கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

இது இவ்வாறிருக்க மாணவர்கள் இவ்விதம் தொற்றுக்குள்ளானமை காரைதீவில் மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(22) பாடசாலைகளுகக்கு வழமைக்கு மாறாக குறைவான மாணவர்களே சமுகமளித்திருந்தனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |