எஸ்.எம்.எம்.முர்ஷித்ஜனாதிபதியின் வழிகாட்டலில் கிழக்கு மாகாணத்தில் உல்லாச துறையை அபிவிருத்தி செய்வதோடு பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி.அனுராதா ஜகம்பத் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவின் பேண்தகு அபிவிருத்தி திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் வாகரை சல்லித்தீவு கடற்கரை பகுதியினை பார்வையிடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டின் உல்லாச துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், அதனூடாக அன்னிய செலாவானியை பெற்றுக் கொள்வதோடு, சுற்றுலா மையங்களை அண்டியுள்ள இளைஞர் யுவதிகளுக்கு அதிக வருமானத்தினை ஈட்டும் வகையில் தொழில் முயற்சிகளை ஏற்படுத்தும் திட்டங்களும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பனிச்சங்கேணி சல்லித்தீவு பகுதியில் இயற்கை வளம் மற்றும் கடல் வளம் காணப்படும் நிலையில் இங்கு சுற்றுலாத் துறையினை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டம் இடம்பெறவுள்ளது.
சல்லித்தீவு பகுதியில் சுற்றுலாத்துறை வளத்தினை மேம்படுத்தி இங்கு சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் வகையிலும், குறித்த பிரதேசத்தினை அபிவிருத்தி செய்யும் வகையிலும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையினால் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்போது பனிச்சங்கேணி சல்லித்தீவு கடற்கரையினை நம்பி வாழும் மீனவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி.அனுராதா ஜகம்பத் கலந்துரையாடலை மேற்கொண்ட போது மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், அவர்களது பிரச்சனைகளை எழுத்து மூலம் தமக்கு சமர்பிக்கும் பட்சத்தில் கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுதி வழங்கினார்.
மீனவர்களாகிய நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் எங்கள் காலடிக்கு வந்து பிரச்ச்சனைகளை கேட்டறிந்து கொண்டு விரைவில் நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்தமைக்கு மீனவர்கள் சார்பான நன்றிகளை தெரிவிப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை தலைவர் ரி.ஹரிபிரதாப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாகரை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திருமதி.ரி.அமலினி, கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பொது முகாமையாளர் ஆர்.ஞானசேகர், சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள், kவாகரைப் பிரதேச இராணுவ அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments: