மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் வலய கல்விப்பணிப்பாளர்களுக்கான அவசர கூட்டம் இன்று (11) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் 2021 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனருத்தாரண வேலைகள் ஆசிரியர் நியமனங்கள் மற்றும் பௌதீக தேவைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. கல்வி வலய ரீதியாக பயிற்சியாளர்களை நியமனம் செய்யும் போது குறித்த ஆளணிக்கு உட்பட்டதாக இணைக்க வேண்டும் என மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரால் கூறப்பட்டது.
இப் பயிற்சியாளர்களை வலய கல்விப்பணிப்பாளர்கள் உகந்த முறையில் பயன்படுத்தி மாவட்ட கல்வித்துறை வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என கூறப்பட்டது. பட்டதாரி பயிலுனர்களை எதிர்வரும் வாரங்களில் இணைப்பு செய்து அவர்களுக்கான குறுகிய கால ஆரம்ப பயிற்சினை வலய கல்விப்பணிப்பாளர்களுக்கூடாக வழங்கி பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் அதிகஸ்ட பிரதேசங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகளவான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற பாடசாலைகளுக்கு பாட அடிப்படையிலான முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
இக் கூட்டத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் மட்டக்களப்பின் ஐந்து வலயங்களுக்கும் பொறுப்பான பணிப்பாளர்கள் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் அபிவிருத்தி குழுத்தலைவரின் செயலாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் இணைப்பு செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
0 comments: