Home » » உரிய நேரத்தில் எல்லோருக்கும் உறைக்க உரத்து பேசினார் தலைவர் அதாவுல்லாஹ் : மக்கள் காங்கிரஸ் பிரமுகர் ஷிபான் புகழாரம் !

உரிய நேரத்தில் எல்லோருக்கும் உறைக்க உரத்து பேசினார் தலைவர் அதாவுல்லாஹ் : மக்கள் காங்கிரஸ் பிரமுகர் ஷிபான் புகழாரம் !



நூருல் ஹுதா உமர்  

நேற்றைய பாராளுமன்ற கூட்டத்தொடரில் அனைவருடைய விரல்களையும் மூக்கின் மேல் வைக்கத் தூண்டியது தேசிய காங்கிரசின்  தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவுடைய பேச்சு. அரசுக்கு உள்ளேயே இருந்து அரசுக்கு எதிராகப் பேசுகின்ற தைரியமும் தெனாவட்டும் அதாவுல்லா, அலி சப்ரி போன்றோருக்கே வாய்த்தது என்று கூறும் அளவுக்கு அவர்களின் காத்திரமான உரைகள் இந்த ஜனாஸா எரிப்பு காலகட்டத்தில் அமைந்திருக்கின்றன என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ள தேசிய காங்கிரசின்  தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவுடைய நேற்றைய பாராளுமன்ற உரை தொடர்பிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும், ஜம்மியத்துல் உலமாவுக்கும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றாகக்கூட்டி, எங்கள் மத உணர்வுகளோடு ஒன்றித்த இந்த விடயத்துக்கு விடைதேடும் நிலை இன்று வரை காணப்படாத போதும், தலைவர் அதாவுல்லா போன்றோரின் உள்ளக்கிடக்கைகளை உரை வடிவில் கேட்கும்போது நமது உம்மத் ஆறுதல் அடைகிறது.

சில புல்லுருவிகளும், கோடரிக் காம்புகளும் இவ்வாறு சமூக நோக்கோடு செயல்படும் தலைவர்களின் செயற்பாடுகளை மழுங்கடிக்கும் முகமாக, உள்ளிருந்தே  உருவெடுப்பது, விமர்சிப்பது,  அற்ப அரசியல் நோக்கோடு செயற்படுவதானது இந்த நேரத்துக்கு பொருத்தமான ஒன்றல்ல.

தலைவர் உரையாற்றுகின்றபோது , பாராளுமன்றத்தில் உள்ள அத்தனை சட்ட வல்லுனர்களையும் நோக்கி "தான் பேசுவது பிழை என்றால் தன்னை வழிபடுத்துமாறு" கோருகிறார். நீண்டகாலமாக அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சர்கள் உறுப்பினர்கள் வாய் திறக்காத போதும்,   நமது சமூகத்தில் இருக்கின்ற சிலர் அவருக்கு முகநூலில்  தெளிவாக்கம் கொடுக்க நினைப்பது பொருத்தமான செயல் ஒன்றாகக் காணவில்லை.

ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் கட்சி பேதங்களுக்கு அப்பால் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆகவேதான் சமூகம் தட்டிக் கொடுக்க முன்வரவேண்டும். ஒரு தலைவன் சமூகத்துக்காக பேசுகிறார் என்றால்,  சரி அல்லது பிழைக்கப்பால் அவனை அரவணைத்துச் சென்றால் மாத்திரமே மேய்ப்பர்கள் உள்ள சமூகமாகமாறி நமது இலக்கை அடைய முடியும் என்றார்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |