Home » » வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்:சிவசக்தி ஆனந்தன்

வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்:சிவசக்தி ஆனந்தன்



அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டனியின் பொதுச் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை தொடர்பில் இன்று (10.01) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்த மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தால் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் யுத்த காலத்தில் மரணித்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கு கூட இந்த அரசாங்கம் தடை விதித்து அடக்குமுறைகளை பிரயோகித்து வருகின்றது. அதன் நீட்சியாக தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் வடக்கு-கிழக்கு பகுதியைச் சேர்ந்த பல மாணவர்களின் தாய், தந்தையர்கள்,சகோதாரர்கள், உறவினர்கள் மட்டுமன்றி விரிவுரையாளர்கள் கூட முள்ளியவாய்கால் மண்ணில் மரணித்துள்ளார்கள். அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி அழிக்கப்பட்டமையானது தமிழ் மக்கள் மனங்களில் பாரிய காயங்களை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு கல்விச்சாலை என்பதற்கு அப்பால் தமிழ் மக்களின் அடையாளமும், உயிர் மூச்சும் ஆகும். தெற்கில் உள்ள ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஜேவிபியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு தடையல்ல. ஆனால் தமிழ் மக்கள் தமது பல்கலைக்கழகத்தில் தமது உறவுகள் நினைவாக தூபி அமைப்பதற்கு மட்டும் தான் தடையா..? இந்த அரசாங்கம் ஒரு நாடு, ஒரு சட்டம் எனக் கூறிக் கொண்டு தெற்குக்கு ஒரு நீதியையும், ஒரு சட்டத்தையும் பயன்படுத்திக் கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றது. வடக்கு, கிழக்கில் வேறு சட்டமும், வேறு நீதியும் காணப்படுகின்றது.

கொவிட் -19 தாக்கத்தால் மரணித்த முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களைக் கூட அடக்கம் செய்வதற்கு மறுத்து வரும் இந்த அரசாங்கம், தற்போது தமிழ் மக்களின் நினைவு கூரும் உரிமையையும் மறுத்து வருகின்றது. ஐ.நா மனிதவுரிமை பேரவையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுதந்திரமான மத வழிபாடு, இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை என்பவற்றை அப்பட்டமாக மீறியுள்ள கோட்டா - மஹிந்தா அரசாங்கம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக காட்டு மிராண்டித்தனமான ஆட்சியை கொண்டு நடத்துகின்றது. இந்த அரசாங்கத்தின் இத்தகைய நிலைப்பாடு இந்த நாட்டை மேலும் ஒரு மோசமான நிலைக்கே கொண்டு செல்லும்.

சட்டவிரோதமாக அமைத்த தூபியை அகற்றுவது என்றால், அதற்கு முன் சட்டவிரோதமாக தமிழர் தாயகப் பிரதேசத்தில் இடம்பெறும் குடியேற்றங்கள், காணி அபகரிப்புக்கள், பௌத்த மயமாக்கல், பௌத்த தூபிகளை நிறுவுதல், காடு அழிப்பு என்பவற்றை முதல் தடை செய்ய வேண்டும். அதனை நிறுத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் தமிழ் மக்களின் இன விகிதாசரத்தையும், நிலப்பரப்பையும் மாற்றியமைக்கும் வகையில் சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்கும் இந்த அரசாங்கம், நினைவுத்தூபியை அகற்றுவதற்கு மட்டும் புது வியாக்கியானத்தை கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தநிலையில் யாழ் பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை இடித்து அழித்தமைக்கு எதிராக வடக்கு- கிழக்கு பகுதியில் நாளை (11.01) முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், தனியார் பேரூந்துகள், உத்தியோகத்தர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தமிழ் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்டு பூரண ஆதரவை வழங்கி இந்த அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக ஓரணியில் குரல் கொடுக்க முன்வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |